இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் தற்போது ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்தத் தொடருக்கு மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆகவே இந்த முறை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைபைப்பில் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய வீரர்கள் பதிவு செய்த சிறப்பான பந்துவீச்சுகள் என்னென்ன?
ஶ்ரீசாந்த் 3/45(2010):
2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா-இந்திய தொடரில் டர்பனில் இரண்டாவது டெஸ்ட் நடைபெற்றது. அந்தப் போட்டியை இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ஶ்ரீசாந்த் கிரேம் ஸ்மித், ஹசிம் ஆம்லா மற்றும் காலிஸ் ஆகியோரின் விக்கெட்டை எடுத்து இந்திய அணி வெற்றிக்கு முக்கியமான பங்கு வகித்தார்.
ஹர்பஜன் சிங் 7/120(2011):
2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கேப்டவுன் போட்டி டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசினார். அவர் 120 ரன்கள் விட்டு கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
புவனேஸ்வர் குமார் 4/87(2018)
2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டவுனில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் தென்னாப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 87 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் 4/113 (2018):
2018-ஆம் ஆண்டு செஞ்சுரியனில் தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். தென்னாப்பிரிக்காவில் ரவிச்சந்திரன் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சு இது என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது ஷமி 5/28 (2018):
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா-இந்தியா தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகானிஸ்பெர்கில் நடைபெற்றது. அந்தப் போட்டியை இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இரண்டாவது இன்னிங்ஸில் 28 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அத்துடன் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
பும்ரா 5/54 (2018):
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா-இந்தியா தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகானிஸ்பெர்க்கில் நடைபெற்றது. அந்தப் போட்டியை இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் இன்னிங்ஸில் 54 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மேலும் படிக்க: வாஷிங்டன் சுந்தர் To ஸ்ரேயாஸ் ஐயர்- 2021-ஆம் ஆண்டில் அசத்திய அறிமுக வீரர்கள் !