ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் ஏலம் இன்று நடைபெற்று முடிந்தது. அதில் அதிகபட்சமாக இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி 15.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அவர் தவிர ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில் முதல் நாளில் அதிக விலைக்கு ஏலம் போன இளம் இந்திய வீரர்கள் யார் யார்?
ரியான் பராக் (3.80 கோடி):
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரியான் பராக். இவர் 15 வயது அசாம் மாநில அணியில் இடம்பிடித்தார். அங்கு இவர் சிறப்பாக ஆடுவதை பார்த்த தேர்வுக்குழுவினர் யு-19 உலகக் கோப்பைக்கான அணியில் இவரை எடுத்தனர். 2018ஆம் ஆண்டு தன்னுடைய 16 ஆவது வயதில் யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் இவர் களமிறங்கினார். அந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு 20 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்தார். 2019ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு சிறப்பான கேமியோ இன்னிங்ஸ் ஆடினார். அதன்பின்னர் 2020 மற்றும் 2021ஆகிய தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை இவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்தச் சூழலில் தற்போது மீண்டும் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3.80 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
கார்த்திக் தியாகி(4.00 கோடி):
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் தியாகி. அந்த மாநிலத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஸ்விங் பந்துவீச்சாளர்களான பிரவீன் குமார் மற்றும் புவனேஷ்வர் குமாரை போல் இவரும் ஸ்விங் பந்துவீச்சில் வல்லவர். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இவர் இடம்பிடித்திருந்தார். அதில் இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசினார். அதன்காரணமாக 2020ஆம் ஆண்டு இவரை 1.30 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்தது. இதுவரை 14 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இம்முறை இவரை சன்ரைசர்ஸ் அணி 4 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
ராகுல் திரிபாதி(8.50 கோடி):
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர் ராகுல் திரிபாதி. இவர் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார். அப்போது புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு 3.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்தார். எனினும் 2018 மற்றும் 2019 தொடர்களில் சிறப்பாக விளையாடவில்லை. இதன்காரணமாக 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு தொடர்களில் இவர் வெறும் 30 லட்சத்திற்கு கொல்கத்தா அணியில் இடம்பிடித்தார். கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஃபினிசராக சில போட்டியில் ஆடினார். குறிப்பாக குவாலிஃபையர் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் பந்தை சிக்சருக்கு விரட்டி கொல்கத்தாவை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். அதன்காரணமாக இம்முறை இவரை 8.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
ராகுல் திவாட்டியா(9.0 கோடி):
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் திவாட்டியா இடது ஆட்டக்காரர் மற்றும் லெக் ஸ்பின் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கி வருகிறார். எனினும் 2020ஆம் ஆண்டு ஒரே ஒரு போட்டி தான் இவருடைய வாழ்க்கையை மாற்றியது. பஞ்சாப் அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அனி சார்பாக இவர் களமிறங்கினார். அதில் 18ஆவது ஓவரில் இவர் 5 சிக்சர் விளாசி அசத்தினார். அப்போது முதல் இவர் மீது பலரின் வெளிச்சம் பட தொடங்கியது. இதன்காரணமாக இம்முறை ஏலத்தில் இவரை 9 கோடிக்கு குஜராத் அணி எடுத்துள்ளது.
அவேஷ் கான்(10 கோடி):
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் அவேஷ் கான். இவர் தன்னுடைய சிறு வயது முதல் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாட தொடங்கினர். இதன்காரணமாக 2016ஆம் ஆண்டு யு-19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். அத்துடன் அந்தத் தொடரில் 12 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்காரணமாக 2017ஆம் ஆண்டு பெங்களூரு அணியில் இடம்பிடித்தார். அந்தத் தொடரில் பெரிதாக இவர் விளையாடவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் சிறப்பாக விளையாடினார். தற்போது வரை 25 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 29 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தற்போது இவரை 10 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
மேலும் படிக்க: தொடக்க ஆட்டக்காரர் டூ கேட்ச் மன்னன் வரை- மனதை கவர்ந்த டூபிளசிஸூம் சென்னையும் !