ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலம் தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் தென்னாப்பிரிக்க அணியின் வீரர் டூபிளசிஸை 7 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிஎஸ்கே அணியிடம் இருந்த டூபிளசிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் சென்றுள்ளார். 


 


இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டூபிளசிஸிற்கும் இடையே இருந்த பந்தம் என்ன? எப்படி அவர் சிஎஸ்கே அணிக்கு முக்கியத்துவமாக அமைந்தார்? 


 


சிஎஸ்கே அணியில் டூபிளசிஸ்:


ஐபிஎல் தொடரில் டூபிளசிஸ் 2012ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அப்போது முதல் 2015ஆம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் விளையாடினார். அதில் 2012ஆம் ஆண்டு 13 போட்டிகளில் 398 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு இவர் 303 ரன்களும், 2015ஆம் ஆண்டு 380 ரன்களும் அடித்தார். இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இவர் புனே அணிக்காக விளையாடினார். 




சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் திரும்பியது. அப்போது மீண்டும் சிஎஸ்கே அணியில் டூபிளசிஸ் விளையாடினார். அதில் குவாலிஃபையர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூபிளசிஸ் 42 பந்துகளில் 67* ரன்கள் அடித்து சென்னை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். அதன்பின்னர் 2019ஆம் ஆண்டும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2021ஆம் ஆண்டு சென்னை அணி ஐபிஎல் தொடரை வெல்ல ருதுராஜ் கெய்க்வாட் உடன் இவரும் ஒரு முக்கிய காரணமாக தொடக்க ஆட்டக்காரராக சென்னை அணிக்கு வாட்சன், ராயுடு மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் உடன் களமிறங்கி டூபிளசிஸ் முக்கிய பலமாக அமைந்தது. 


 


டூபிளசிஸூம்- தோனியும்: 


ஐபிஎல் தொடரில் தோனி, டூபிளசிஸ் ஆகிய இருவரும் ஒன்றாக 10 ஆண்டுகள் விளையாடியுள்ளனர். சென்னை தவிர புனே அணியிலும் இவர் தோனியின் கேப்டன்சிக்கு கீழ் விளையாடியுள்ளார். ஆகவே இவர்கள் இருவருக்கும் நீண்ட பந்தம் ஐபிஎல் தொடரில் இருந்துள்ளது. இதுதொடர்பாக டூபிளசிஸ் பல முறை கூறியுள்ளார். குறிப்பாக சில கடந்த ஆண்டு ஒரு பேட்டியில், “சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் சிறப்பான அணிகள் ஒன்று. அதில் கேப்டன் தோனி மிகவும் முக்கியமானவர். என்னை பொறுத்தவரை நல்ல ஆளுமை கொண்ட அணி தலைவர்களில் தோனி ஒருவர். அவரிடம் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் நான் நிறையே கற்று கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். 


இப்படி சென்னைக்கும் டூபிளசிஸிற்கும் இடையே நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த இந்தப் பந்தம் தற்போது முறிந்துள்ளது. இது சென்னை ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 


ஃபில்டிங்கிலும் அசத்திய டூபிளசிஸ்:


சென்னை அணியில் தன்னுடைய பேட்டிங் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் டூபிளசிஸ் சிறப்பான பங்களிப்பை அளித்தார். மொத்தமாக விளையாடியுள்ள 100 போட்டிகளில் இவர் 66 கேட்ச்களை பிடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக ஒரே போட்டியில் 4 கேட்ச்கள் வரை பிடித்து அசத்தியுள்ளார். சென்னை அணியில் ஜடேஜாவிற்கு பிறகு சிறப்பான ஃபீல்டராக டூபிளசிஸ் வலம் வந்தார். 




இப்படி தொடக்க ஆட்டக்காரர் மற்றும் சிறந்த ஃபில்டர் என்ற பல பரிமானங்களை கொண்டிருந்த டூபிளசிஸ் தற்போது சென்னை அணியில் இருந்து பெங்களூரு அணிக்கு செல்கிறார். இவருடைய அணி மாற்றம் சென்னை ரசிகர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


மேலும் படிக்க: ஐபிஎல் ஏலம்: மும்பையில் சுழல் வீசப்போகும் தமிழன் முருகன் அஷ்வின் !