ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ்(32), டூபிளசிஸ்(86) ஆகியோரின் ஆட்டத்தால் சிறப்பான ஸ்கோரை அடித்தது. சென்னை அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தது. அத்துடன் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்தையும், டூபிளசிஸ் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். 


இந்நிலையில் மூன்றாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் களமிறங்கியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மீண்டும் 190 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 190 ரன்கள் அடித்தது. அந்தப் போட்டியில் பிஸ்லா(89),காலிஸ்(69) ஆகியோரின் ஆட்டத்தால் 19.4 ஓவர்களில் கொல்கத்தா அணி 192 ரன்கள் அடித்து கோப்பையை வென்றது. 


 






அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சாஹா 115 ரன்கள் விளாசியிருந்தார். அதன்பின்னர் 200 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் மணிஷ் பாண்டே 94 ரன்கள் விளாசி கொல்கத்தா அணியை இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வைத்தார். அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் அடித்து போட்டியை வென்றது. 


எனவே இந்த முறையும் அதேபோல் 190 ரன்களுக்கு மேல் கொல்கத்தா அணி சேஸிங் செய்து வருகிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தாவின் ஹாட்ரிக் ஃபைனல் சேஸை தடுக்குமா சென்னை அணி என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும்  நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 5 முறை முதலில் பேட்டிங் செய்துள்ளது. அந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல் கொல்கத்தா அணி யுஏஇயில் ஐபிஎல் தொடங்கிய பிறகு 6 போட்டிகளில் சேஸ் செய்துள்ளது. அந்தப் போட்டிகள் அனைத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் சென்னை அணி இன்று முதலில் பேட்டிங் செய்தது. ஆகவே இந்த ஸ்டாட்ஸை சென்னை அணி இன்று உடைத்து கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை பட்டியலில் இணைந்த டூபிளசிஸ்-ருதுராஜ் ஜோடி !