ஐ.பி.எல். தொடரில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரதான அணியாகும். அங்கிள் ஆர்மி, வயதானவர்கள் அணி என்று சிலர் சென்னை அணியை விமர்சித்தாலும் அத்தனை விமர்சனங்களுக்கும் பதிலடி அளித்து 2018ம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியதுடன், நடப்பாண்டில் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.


இந்த ஐ.பி.எல். தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடும் சில வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இருந்தே ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் விவரம் பின்வருமாறு:


இம்ரான் தாஹிர்:


சென்னை ரசிகர்களால் செல்லமாக “பராசக்தி எக்ஸ்பிரஸ்” என்று அழைக்கப்படுபவர் இம்ரான் தாஹிர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2018, 2019ம் ஆண்டு சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தினார். 1979ம் ஆண்டு பிறந்த இம்ரான் தாஹிர் இதுவரை 59 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 33 ரன்களும், 82 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.




42 வயதான இம்ரான் தாஹிர் இந்த தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே ஆடினார். வயது மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இவர் இந்த தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ட்வெய்ன் ப்ராவோ:


சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை தனது பந்துவீச்சு, பேட்டிங் மட்டுமின்றி தனது வித்தியாசமான செலிபிரேஷன் மூலமாக மகிழ்ச்சிப்படுத்துபவர் ட்வெய்ன் ப்ராவோ. ஒரு ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.




150 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியுள்ள ப்ராவோ 1537 ரன்களையும், 166 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 1983ம் ஆண்டு பிறந்த ப்ராவோவிற்கு தற்போது 38 வயதாகிறது. இதனால், இவர் இந்த ஐ.பி.எல். தொடருடன் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.


சுரேஷ் ரெய்னா:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக விளங்குபவர் சுரேஷ் ரெய்னா. தோனியை தல என்றும் அழைக்கும் ரசிகர்கள் இவரை சின்ன தல என்று செல்லமாக அழைக்கின்றனர். சுரேஷ் ரெய்னா இதுவரை 205 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 528 ரன்களை குவித்துள்ளார். ஒரு சதம், 39 அரைசதங்கள் அடித்துள்ளார்.





அதிகபட்சமாக ஒரு போட்டியில் 100 ரன்களை குவித்துள்ள ரெய்னா, 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். சுரேஷ் ரெய்னாவிற்கு 34 வயதுதான் ஆகிறது என்றாலும், அவர் தோனி விளையாடாமல் ஐ.பி.எல். போட்டிகளில் நான் ஆடமாட்டேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார். தோனி இந்த தொடருடன் ஓயவு பெற்றால், சுரேஷ் ரெய்னாவும் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.


மகேந்திர சிங் தோனி:


2008ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக கேப்டனாக பொறுப்பு வகித்து வருபவர் தோனி. ஒட்டுமொத்த சென்னை அணியையும் இத்தனை ஆண்டுகளாக தனது தோளில் சுமந்து வருபவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 முறை இறுதிப்போட்டிக்கு நுழைந்ததற்கும், மூன்று முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதற்கும் தோனி மிகப்பிரதான காரணம்.




1981ம் ஆண்டு பிறந்த தோனி 219 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி இதுவரை 4 ஆயிரத்து 746 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 23 அரைசதங்கள் அடங்கும். 40 வயதான தோனிக்கு இதுவே கடைசி ஐ.பி.எல். தொடராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.