ஐ.பி.எல். தொடரின் 2021ம் ஆண்டிற்கான இறுதிப்போட்டி இன்று துபாயில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையும், கொல்கத்தாவும் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸை வென்ற  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 


சென்னை அணியில் தோனி, டூபிளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட்,ராயுடு,உத்தப்பா, ஜடேஜா, ஷர்துல் தாகூர்,பிராவோ, உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.  அதேபோல் கொல்கத்தா அணியில் மோர்கன்,தினேஷ் கார்த்திக், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி,பெர்குசன், ராகுல் திரிபாதி,  உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது. 


முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ட்விட்டர் பக்கத்தில் இன்றைய ஐபிஎல் இறுதி போட்டி தொடர்பான பதிவு ஒன்று போடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் இறுதி போட்டியில் விளையாடும் இரண்டு அணிகளுக்குமே வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சிறப்பாக விளையாடும் அணி கோப்பையை வெல்லட்டும் என்று கூறியுள்ளது. 






ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வாழ்த்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் கணக்கில் இருந்து நன்றி தெரிவித்து பதிவு ஒன்று போடப்பட்டுள்ளது. அதில், "நீங்கள் காட்டும் 'யெல்லோ லவ்' விற்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவை பலரும் தற்போது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 






இன்று மாலை நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் டூபிளசிஸ் ஆகிய இருவரும் மைல்கல் சாதனையை படைக்க உள்ளனர். அதாவது சென்னை அணிக்காக இன்று 200ஆவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா பங்கேற்க உள்ளார். அதேபோல் டூபிளசிஸ் சென்னை அணிக்காக இன்று தன்னுடைய 100ஆவது போட்டியில் களமிறங்க உள்ளார். இது அவர்கள் இருவருக்கும் ஒரு சிறப்பான போட்டியாக அமைந்தும் என்று கருதப்படுகிறது. 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி 2 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது. 


மேலும் படிக்க: ஜடேஜா டூ திவாட்டியா- வித்தை காட்டிய ஐபிஎல் 2021 தொடரின் டாப் கேட்ச்கள் !