ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணியில் தோனி, டூபிளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட்,ராயுடு,உத்தப்பா, ஜடேஜா, ஷர்துல் தாகூர்,பிராவோ, உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் கொல்கத்தா அணியில் மோர்கன்,தினேஷ் கார்த்திக், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி,பெர்குசன், ராகுல் திரிபாதி, உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டூபிளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். இருவரும் முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்தனர். அதன்பின்னர் 8ஆவது ஓவரில் நரேன் வீசிய பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் சிவம் மாவியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் சேர்த்தது.
இதன்மூலம் நடப்பு தொடரில் இந்த டூபிளசிஸ்-ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி 756 ரன்கள் சேர்த்துள்ளது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஒரே தொடரில் அதிகமாக ரன்கள் அடித்த ஜோடிகள் பட்டியலில் டூபிளசிஸ் மற்றும் ருதுராஜ் ஜோடி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
ஒரே ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த ஜோடிகள்:
939 விராட் கோலி- ஏபி டிவில்லியர்ஸ் (2016)- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
791 வார்னர் - பெர்ஸ்டோவ்(2019)-சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
756 ருதுராஜ் கெய்க்வாட் -டூபிளசிஸ்(2021) -சென்னை சூப்பர் கிங்ஸ்
744 ஷிகர் தவான்- பிருத்வி ஷா(2021)-டெல்லி கேபிடல்ஸ்
731 ஷிகர் தவான்- வார்னர் (2016)- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
மேலும் படிக்க: சிஎஸ்கே முதல் பேட்டிங்கும், ஐபிஎல் 2021 தொடரும் : வரலாற்றை மாற்றி எழுதி கோப்பையை வெல்லுமா?