16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி கனமழையால் ’ரிசர்வ் டே’வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியின் டாஸ் நாளை அதாவது மே மாதம் 29ஆம் தேதி இரவு 7 மணிக்கு போடப்பட்டு, போட்டி 7.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையால் தடைபட்ட இறுதிப் போட்டி
16வது சீசன் ஐ.பி.எல். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று கோப்பையை கைப்பற்றுவதற்கான மோதலில் குஜராத் – சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. ஏற்கனவே ஐ.பி.எல். அட்டவணையில் அறிவித்தபடி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அகமதாபாத்தில் இன்று மாலையில் இருந்தே மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக, போட்டி தொடங்குவதற்கான நேரத்திலும் மழை வெளுத்து வாங்கிக்கொண்டே இருந்தது. சுமார் 8.30 மணிக்கு பிறகு மழை விட்ட காரணத்தால் மைதானத்தில் தேங்கியிருந்த நீர் உடனடியாக அகற்றப்பட்டு, மைதானம் தயார் செய்யப்பட்டது. டாஸ் போடுவதற்காக மைதானம் தயார் செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
போட்டி 9.35 மணிக்கு பிறகு தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- இதன்படி, ஆட்டம் 9.45 மணியளவில் தொடங்கினால் இரு அணிகளின் தரப்பிலும் 1 ஓவர் குறைக்கப்பட்டு 19 ஓவர் போட்டியாக இறுதிப்போட்டி நடத்தப்பட இருந்தது.
- ஒருவேளை போட்டி 10 மணியளவில் தொடங்கும் சூழல் ஏற்பட்டால் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டு 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த திட்டமிடப்படப்பட்டது
- ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு 10.30 மணிக்கு தொடங்கினால் 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்படவிருந்தது.
- ஆட்டம் 7 ஓவர்களாக நடத்தப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டி விதிகளின் படி, 11 மணிக்கு மழை நின்றால் மைதானத்தில் உள்ள நீரை ஒரு மணி நேரத்துக்குள் வெளியேற்றிவிட்டு போட்டியை 12.6க்கு தொடங்க முடியும். ஆனால் அந்த போட்டி 5 ஓவர் போட்டியாக இருக்கும். 11 மணிக்கும் மேல் மழை பெய்தால் போட்டி நாளை நடத்தப்படவேண்டும் என்பது போட்டி விதிமுறை. இதனால் 11 மணி வரையிலும் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் மைதானத்தில் தற்போது வரை மழையின் ஆதிக்கம் நீடித்து வருவதால் போட்டி தொடங்குமா? தொடங்காதா? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. மைதானத்தில் குழுமியுள்ள குஜராத் – சென்னை ரசிகர்கள் இறுதிப்போட்டி நடந்துவிடாதா? என்ற ஏக்கத்துடன் இருந்தனர்.
மழை நின்றபின் போட்டி தொடங்கப்பட்டாலும் மழையின் தாக்கம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டால் இரு அணி வீரர்களும் முழுவதுமே அதிரடியாகவே ஆடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால், இறுதிப் போட்டி நாளை நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளை நாளை பத்திரமாக வைத்திருப்பவர்களுக்குத்தான் போட்டியை நேரில் காண மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: CSK vs GT IPL 2023 Final LIVE Score: அகமதாபாத்தில் விளையாடும் மழை; குறைக்கப்படும் ஓவர்கள்; ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!
மேலும் படிக்க: Ambati Rayudu Retirement: இன்றுதான் கடைசி... ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அம்பத்தி ராயுடு ஓய்வு - சி.எஸ்.கே. ரசிகர்கள் அதிர்ச்சி