அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 16வது சீசன் ஐ.பி.எல். இறுதிப்போட்டியை கைப்பற்றப்போவது யார்? என்பதற்காக சென்னை சூப்பர்கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த நிலையில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் அம்பத்தி ராயுடு ஐ.பி.எல். தொடரில் இருந்து இன்றுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இன்று நடக்கும் போட்டியே தான் விளையாடும் கடைசி ஐ.பி.எல். போட்டி என்றும் அறிவித்துள்ளார். 


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டி இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.


ராயுடுவின் கடைசி போட்டி:


இந்த தொடருக்கு பிறகு தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்று ஏக்கத்துடன் இருக்கும் சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அம்பத்தி ராயுடு இன்று நடக்கும் இறுதிப்போட்டியே ஐ.பி.எல். தொடரில் தான் ஆடும் கடைசி போட்டி என்று அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ 2 சிறந்த அணிகள் மும்பை மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ். 204 போட்டிகள். 14 தொடர்கள். 11 ப்ளே ஆஃப். 8 இறுதி ஆட்டங்கள். 5 கோப்பைகள், நம்பிக்கையுடன் 6வது கோப்பையை நோக்கிய இன்றைய இரவு. இன்று இரவு நடக்கும் இறுதிப்போட்டியே ஐ.பி.எல். தொடரில் என்னுடைய கடைசி போட்டி. உண்மையிலே நான் இந்த சிறந்த தொடரை மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடினேன். அனைவருக்கும் நன்றி. நோ யு டர்ன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


சிறந்த அதிரடி ஆட்டக்காரர்:


அம்பத்தி ராயுடு ஏற்கனவே ஒரு முறை ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு பின்னர் வாபஸ் பெற்றார் என்பதால் இந்த முறை நோ யு டர்ன் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அம்பத்தி ராயுடு மிகச்சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார். 37 வயதான அவர் ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்தவர். அவர் இதுவரை 202 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 4239 ரன்களை விளாசினார். அதில் 1 சதமும், 22 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 100 ரன்களை விளாசியுள்ளார்.


அதுமட்டுமின்றி இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 10 அரைசதங்கள் உள்பட 1694 ரன்களை விளாசியுள்ளார். 6 டி20 போட்டிகளில் ஆடி 42 ரன்கள் எடுத்துள்ளார்.


5 கோப்பைகள்:


மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2010ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அம்பத்திராயுடு அறிமுகமானார். சுமார் 13 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் ஆடி வரும் அம்பத்தி ராயுடு இன்றுடன் தனது ஐ.பி.எல். பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். இந்திய அணிக்காக 2013ம் ஆண்டு ஜிம்பாப்வேவிற்கு எதிாரக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். டி20 போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமானார்.


இந்திய அணிக்காக கடைசியாக ஒருநாள் போட்டியில் 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடியுள்ளார். டி20 போட்டியில் 2016ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி்ககாக களமிறங்கினார். ஐ.பி.எல், தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அம்பத்தி ராயுடுவிற்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


அம்பத்தி ராயுடு 2013, 2015 மற்றும் 2017ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்காக ஆடியுள்ளார். அதேபோல, 2018 மற்றும் 2021ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்காகவும் ஆடியுள்ளார்.