2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் சில வீரர்களை தக்கவைத்துள்ளனர். மேலும் புதிதாக வந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தலா 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பாக எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற உள்ளது.

  


இந்நிலையில் ஐபிஎல் எப்படி தன்னுடைய  வாழ்க்கையை மாற்றியது என்பது தொடர்பாக விராட் கோலி வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். அதில், “முதல் முறையாக ஐபிஎல் தொடரில் என்னை எடுக்கும் போது நான் யு-19 உலகக் கோப்பை தொடருக்காக மலேசியாவில் இருந்தேன். அப்போது இந்தியாவிற்கு விளையாடாத வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் இருந்தது. அந்த சமயத்தில் என்னை டெல்லி அணி எடுக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் அப்போது பிரதீப் சங்வானை எடுத்தனர். என்னை ஆர்சிபி அணி எடுத்தது. 






அது முதல் என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அப்போது அவர்கள் எடுத்த தொகையை கேட்டவுடன் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது” எனக் கூறியுள்ளார். விராட் கோலியை முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அப்போது முதல் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக அனைத்து ஐபிஎல் தொடர்களிலும்  விளையாடி வருகிறார். தற்போது அவரை ஆர்சிபி 15 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடருடன் அவர் ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். எனவே இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 






இந்த ஐபிஎல் தொடருக்கு ஆர்சிபி அணி விராட் கோலி தவிர மேக்ஸ்வேல் (11 கோடி ரூபாய்), முகமது சிராஜ் (7 கோடி ரூபாய்) ஆகிய வீரர்களையும் தக்கவைத்துள்ளது. 


மேலும் படிக்க: சச்சினுக்கு பவுலிங் செய்வதை வெறுத்தேன்!’ - அக்தருடன் உரையாடலில் மனம் திறந்த பிரெட் லீ!