பி.சி.சி.ஐ இன்று 2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கவுள்ள கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அடங்கிய முழுப் பட்டியலையும் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் மேற்கு இந்திய கிரிக்கெட் வீரர் க்றிஸ் கெய்ல், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. 


பி.சி.சி.ஐ வெளியிட்ட அறிக்கையில், `ஐ.பி.எல் 2022 போட்டிகளில் பங்கேற்கும் 590 வீரர்களின் ஏலத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது; வரும் பிப்ரவரி 12, 13 ஆகிய நாள்களில் இந்த ஏலம் பெங்களூருவில் நடைபெறும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.



தேசிய அணிகளில் விளையாடிய வீரர்கள் மொத்தமாக 228 என்ற எண்ணிக்கையிலும், விளையாடாத வீரர்கள் 355 என்ற எண்ணிக்கையிலும், அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த 7 வீரர்கள் என்ற எண்ணிக்கையிலும் மொத்தமாக 590 வீரர்கள் ஏலத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். 


ஐ.பி.எல் போட்டிகளின் மிகப்பெரிய ஸ்டார்களுள் ஒருவராகக் கருதப்படும் க்றிஸ் கெய்ல் வரும் 2022ஆம் ஆண்டின் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்சமாக 6 சென்சுரிகளை எடுத்து சாதனை படைத்ததோடு, 142 போட்டிகளில் 4965 ரன்களைக் குவித்துள்ளார் க்றிஸ் கெய்ல். ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளவர் க்றிஸ் கெய்ல். 






இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் படுதோல்வியைச் சந்துள்ளதால், இந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பங்கேற்ற பென் ஸ்டோக்ஸ் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பதிவு செய்து கொள்ளவில்லை. அவரது அணியைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் ஆகியோர் ஐபிஎல்லில் பங்கேற்கின்றனர். இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 


தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ராஸி வான் டி டூசனின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது அணியைச் சேர்ந்த டெம்பா பவுமாவின் பெயர் இடம்பெறவில்லை. இவரும் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்குக் காரணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.