ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ப்ரெட் லீ தான் சர்வதேசப் போட்டிகள் விளையாடிய போது இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசுவதை வெறுத்ததாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். 2000களின் முதல் பத்தாண்டுகளில் இருவரும் பலமுறை களத்தில் எதிர்த்துப் போட்டியிட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


1999ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ப்ரெட் லீ. தனது அறிமுகப் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணியில் 5 விக்கெட்களை வீழ்த்தினார் ப்ரெட் லீ. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த போதும், சிறந்த விளையாட்டு வீரராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார். 



சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சுஐப் அக்தரின் யூட்யூப் சேனலில் பேசிய பிரெட் லீ, `சச்சினுக்கு பவுலிங் செய்வதை நான் மிகவும் வெறுத்தேன். ஏனென்றால் அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவரது திறமை அதீதமானது. அதே போல, நான் எதிர்கொள்வதற்குப் பயந்த பந்துவீச்சுகளில் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சு முக்கியமானது. அதனை எதிர்கொள்வது கடினமான ஒன்று’ என்று கூறியுள்ளார்.






மேலும் அவர், `வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீசுவது எனக்கு பிடித்தமான ஒன்று.. ஆல்ரவுண்டர்களில் சிறந்தவர் ஜாக்குஸ் காலிஸ். நான் பார்த்த மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் அவர்’ என்றும் கூறியுள்ளார். 


தொடர்ந்து பேசியுள்ள பிரெட் லீ இந்தியா மீதான தனது அன்பையும் பொழிந்தார். தான் முதன்முதலாக தேசிய அணியில் இடம்பெற்று விளையாடியது, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது, இசை வீடியோக்களிலும், திரைப்படங்களிலும் நடித்து என இந்தியா குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் பிரெட் லீ. 



`இந்தியா எனக்கு பிடித்தமான இடம். நான் அதிர்ஷ்டசாலி. இந்தியாவில் பல வாய்ப்புகள் இருப்பதால் நான் என்னுடைய பல நாள்களை இந்தியாவில் செலவிட்டுள்ளேன். நான் ராவல்பிண்டிக்கு வருவதையும் விரும்புகிறேன்’ எனவும் அவர் கூறியுள்ளார். 2006ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராஃபி பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணி வென்ற போது, அதில் இடம்பெற்றிருந்தவர். 


45 வயதான பிரெட் லீ இதுவரை கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்ச வேகமாக பவுலிங் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.