துபாயில் நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகளும் தங்களது அணியில் பலமான வீரர்களை சேர்த்து வருகின்றனர். இதுவரை நடைபெற்ற ஏலத்தில் ஐபில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு கொல்கத்தா அணி ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூபாய் 24.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இவருக்கு அடுத்து ஹைதராபாத் அணி ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸை ரூபாய் 20 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.


இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் குறிப்பாக பேட்ஸ்மேன்கள் பட்டியலில், தமிழ்நாட்டினைச் சேர்ந்த ஷாரூகான் இடம் பெற்று இருந்தார். தமிழ்நாடு வீரர் ஷாரூக்கானை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூபாய் 7 கோடியே 40 லட்சத்திற்கு  வாங்கியுள்ளது. இவரை வாங்க பஞ்சாப் அணி போட்டி போட்டது. இவரை கடந்த ஏலத்தில் பஞ்சாப் அணி ரூபாய் 9 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக அவரை விடுவித்த பஞ்சாப் அணி மீண்டும் ஷாரூகானை குறைந்த விலைக்கு வாங்க முற்பட்டது. இறுதியில் குஜராத் அணி இவரை வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷாரூக்கான் ஏலத்திற்கு வரும்போது சென்னையிடம் சுமார் 3 கோடி இருந்தது. 


இதுவரை 31 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஷாரூகான் 426 ரன்கள் சேர்த்துள்ளார். இவர் இதில் 26 பவுண்டரிகளும் 28 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். அதாவது அவர் எடுத்த 426 ரன்களில் 276 ரன்கள் பவுண்டரியால் சேர்க்கப்பட்டது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த மணிமாறன் சித்தார்தை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ.2.40 கோடிக்கு வாங்கியுள்ளது. இவர் சுழற்பந்து வீச்சாளராவார். அதேபோல் மற்றொரு தமிழ்நாடு வீரரான முருகன் அஸ்வினை எடுக்க எந்த அணியும் முன்வராததால் அவர் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் லீக்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை இழக்கின்றார். 


சென்னை அணி வாங்கிய வீரர்கள்


நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா மற்றும் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துயாபில் நடந்து வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் வாங்கியுள்ளது. இதில் ரச்சின் ரவீந்திராவை ரூபாய் 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்கூரை ரூபாய் 4 கோடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. 


அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டேரில் மிட்ஷெல்லினை ரூபாய் 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஏற்கனவே சென்னை அணியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே உள்ள நிலையில், நியூசிலாந்து அணியில் இருந்து ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்ஷெல்லை சென்னை அணி வாங்கியுள்ளது. அதேபோல் சென்னை அணி வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிகுர் ரஹ்மானை அவரின் அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியுள்ளது. சென்னை அணி இதுவரை வாங்கிய வீரர்களில் இவரை வாங்கியதை சென்னை ரசிகர்களே பாராட்டி வருகின்றனர்.