IPL 2025 Final Weather Report: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், ரிசர்வ் டே பின்பற்றப்படும்.
ஃபைனலில் பஞ்சாப் - பெங்களூரு மோதல்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த அணிகள் இதுவரை முறையே 3 மற்றும் ஒருமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தாலும், ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. இதனால், 2008ம் ஆண்டு அறிமுகமான 8 அணிகளில் இரண்டு அணிகளான, பெங்களூரு மற்றும் பஞ்சாபில் 18 ஆண்டுகால காத்திருப்பிற்குப் பிறகு முதல்முறையாக கோப்பையை வெல்லப்போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
நரேந்திர மோடி மைதானம் - வானிலை அறிக்கை:
இறுதிப்போட்டி நடைபெற உள்ள அகமதாபாத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு கனமழை பாதிக்கப்பட்டது. இதனால் மும்பை மற்றும் பஞ்சாப் இடையேயான இரண்டாவது குவாலிஃபையர் போட்டி கூட இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியின் போது மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வானிலை அறிக்கையின்படி, இன்று அகமதாபாத்தில் மழை பொழிய 62 சதவிகிதம் வாய்ப்புள்ளது. ஆனால், மாலை 7 மணிக்கு பிறகு மழை பொழிவதற்கான வாய்ப்புகள் குறைவு” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைனலில் பஞ்சாப் - பெங்களூரு: ரிசர்வ் டே
இரண்டாவது குவாலிஃபையர் போட்டியின் போது கூட வானிலை அறிக்கை இதையே சொன்னது. ஆனால், மழை வெளுத்து வாங்கியதை கவனத்தில் கொண்டால், இன்று அந்த அளவிற்கு மழை பொழிய வாய்ப்புள்ளது. அதே பாணியில் மழை தொடர்ந்தாலும், 2 மணி நேரம் வரை காத்திருந்து எந்தவித ஓவர் குறைப்பு இன்றி போட்டி இன்றே நடத்தப்படும். ஒருவேளை போட்டியே நடத்த முடியாத அளவிற்கு கனமழை கொட்டினால், ரிசர்வ் டே அடிப்படையில் போட்டி நாளை நடத்தப்படும். இதேபாணியில் தான் கடந்த 2023ம் ஆண்டு சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோலி கனவிற்கு ஆப்பா?
முதல் இன்னிங்ஸ் மட்டும் விளையாடி இரண்டாவது இன்னிங்ஸ் மழையால் தொடர முடியாமல் போனாலும் ரிசர்வ் டே பின்பற்றப்படும். ஒருவேளை ரிசர்வ் டே அன்றும் மீண்டும் மழை குறுக்கிட்டால், சேஸிங்க் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ரன் -ரேட்டை கருத்தில் கொண்டு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். அதையும் தாண்டி, ரிசர்வ் டேவிலும் கனமழை தொடர்ந்து, ஒரு பந்துகூட வீச முடியாத சூழல் ஏற்பட்டால் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அணிக்கு கோப்பை வழங்கப்படும். அதவாது பஞ்சாப் கிங்ஸ் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். அப்படி நடந்தால், நிச்சயம் இந்த முறை கோப்பையை கைப்பற்றுவோம் என, காத்திருக்கும் கோலிக்கும், அவரது ரசிகர்களுக்கும் பேரிடியாக இருக்கும். ஆனால், அந்த அளவிற்கு கனமழை பொழியும் சூழல் தற்போது அகமதாபாத்தில் இல்லை என வானிலை அறிக்கைகள் குறிப்பிடுகின்றனர்.