IPL Final 2025 RCB vs PBKS: நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் ஆர்சிபி - பஞ்சாப் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அச்சுறுத்தும் மழை:

நேற்று முன்தினம் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதிய போட்டியிலும் மழை அச்சுறுத்தியது. மழையின் காரணமாக தாமதமாக தொடங்கிய அந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. போட்டி தொடங்கிய பிறகு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் இன்று போட்டி நடைபெற உள்ள நிலையில், மாலையில் திடீரென மழை பெய்தது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது மழை நின்றுவிட்டதால் மிகவும் இயல்பான நிலை திரும்பியுள்ளது. இருப்பினும், போட்டி தொடங்கும் நேரத்திலோ, போட்டி நடைபெறும் நேரத்திலோ மழை பெய்யுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிற்கிறது. இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் நாளை ரிசர்வ் டே உள்ளது. 

18 வருட காத்திருப்பு:

ஒருவேளை போட்டி மழையால் பாதிக்கபபட்டால் போட்டி தொடங்குவதற்கு இரவு 11.56 மணி வரை காத்திருக்கப்படும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் மகுடம் என்பதாலும், இது 18 வருட காத்திருப்பு என்பதாலும் இரு அணிகளும் தங்களது முழு பலத்தை காட்டி வெற்றி பெறத் துடிப்புடன் ஆடுவார்கள். 

1 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட அகமதாபாத் மைதானத்தில் இந்த இறுதிப்போட்டியை காண மதியம் முதலே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். ஆர்சிபி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளின் சீருடையும் சிவப்பு நிறம் என்பதால் செங்கடல் போன்று ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து மைதானத்தில் குவிந்து வருகின்றனர். இறுதிப்போட்டி என்பதாலும் 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட மைதானம் என்பதாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்திய ராணுவத்திற்கு மரியாதை:

மேலும், ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடிய இந்திய ராணுவத்தினரை பாராட்டி வீடியோ ஒளிபரப்பப்பட்டது. மேலும், அவர்களின் தியாகத்தை போற்றி பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் பாட்டு பாடி அசத்தினார்.