ஐபிஎல் சீசன் 17:


இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 17வது சீசனுக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. போட்டிக்கான வீரர்களின் ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி முடிந்தநிலையில் தற்போது அனைத்து ரசிகர்களின் பார்வையும் தேதிகள் மீது உள்ளது. புதிய ஐபிஎல் சீசன் எப்போது, எங்கு நடைபெறும் என்பதை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில், மகளிர் பிரிமியர் லீக்கின் இரண்டாவது சீசனுக்கான அட்டவணையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


முன்னதாக, ஐபிஎல் புதிய சீசன் மார்ச் மாதம் இறுதியில தொடங்கும் என்றும், மகளிர் பிரீமியர் லீக் பிப்ரவரி இறுதியில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகள் தேர்தல் தேதிகளுடன் முரண்படக்கூடாது என்று பிசிசிஐ விரும்புகிறது. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றபோது, அனைத்து ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெற்றன. இந்த முறையும் வாரியம் அதையே விரும்புவதாக தெரிகிறது.


டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய டாடா நிறுவனம்:


இந்நிலையில்  ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை பிசிசிஐ நடத்தி முடித்துள்ளதுமுன்னதாக, 2018 ஆம் ஆண்டில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் விவோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் சுமார் 2,199 கோடி ரூபாய்க்கு ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில், இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான அரசியல் விவகாரங்களால் ஒப்பந்தத்தை  அதன்பின்னர் பிசிசிஐ தொடரவில்லை. இதனால் கடந்த சீசனில டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.


ஆண்டுக்கு ரூ.365 கோடி கொடுக்க டாடா நிறுவனம் முன்வந்தது. இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான டைட்டில் ஸ்பான்சஷிப் டெண்டர் டிசம்சர் கடைசி வாரத்தில் கோரப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் ரூ.5 லட்சம் முன்தொகையுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதில் ஆதித்யா பிர்லா குழுமமும் கலந்துகொண்டது. அந்த நிறுவனம்  டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு ரூ.2500 கோடி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.


இதனால் ஐபிஎல் நிர்வாக குழு தரப்பில் டாடா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் டாடா நிறுவனமும் 5 ஆண்டுகளுக்கு ரூ.2500 கோடி ஒப்புக் கொண்டதால், இறுதியாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் டாடா நிறுவனமே கைப்பற்றியது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு டாடா நிறுவனத்துடன் ஐபிஎல் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Tamil thalaivas vs Bengaluru bulls: பெங்களூரு புல்ஸை வெல்லுமா தமிழ் தலைவாஸ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!


மேலும் படிக்க: Rinku Singh: இடது கை தோனி.. ரிங்கு சிங்கை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்! விவரம் இதோ!