கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன். கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரான  இவருக்கு  அன்பரசி என்ற மனைவியும் கிஷோர் (வயது 10) மற்றும் சக்திதரன் (வயது 8) என்ற மகன்கள்  உள்ளனர்.   கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. கோபி கிருஷ்ணன் கிரிக்கெட் பிளேயர் தோனியின்  தீவிர ரசிகர் என்பதால் சி.எஸ்.கே அணியின் வண்ணத்தில் வீட்டின் கலரை மஞ்சள் நிறத்தில் மாற்றினார்.  குறிப்பாக  வீடு முழுவதும்  தோனியின் படங்களை வரைந்து வைத்துள்ளதால் தோனியின் ரசிகர்கள் பலர் இவரது வீட்டை தேடி வந்து பார்த்து செல்வதை இன்றுவரை வழக்கமாக கொண்டுள்ளனர்.  தோனியின் மீது தீவிர பற்று கொண்டிருந்த கோபி கிருஷ்ணன் இன்று அதாவது ஜனவரி 18ஆம் தேதி அதிகாலை வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 


இதனைப் பார்த்த குடும்பத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சமபவ இடத்திற்கு வந்த ராமநத்தம் காவல் நிலைய காவலர்கள் சடலமாக இருந்த கோபி கிருஷ்ணனின் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இது கொலையா தற்கொலையா என விசாரணை நடத்தியும் வருகின்றனர். விசாரணையில்  கோபி கிருஷ்ணனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும்  கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இதனால்  முன்விரோதமும் இருந்துள்ளது. நேற்று இரவு கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் தாகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபிகிருஷ்ணனை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது . இந்த நிலையில்  கோபி கிருஷ்ணன் அதிகாலையில்  வீட்டில் மின் விசிறியில் சடலமாக தொங்கி உள்ளார்.  இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் கோபி கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.