ஐ.பி.எல் சீசன் 17:


ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.பி.எல் சீசன் 17 நாளை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.


இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகம் இன்று கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்களும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது. இதனைப்பார்த்த சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த எம்.எஸ்.தோனி இந்த முறையும் சென்னை அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் ஹெய்க்வாட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


முதன் முறை வீரர்களாக:


முன்னதாக  5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை அந்த அணி நிர்வாகம் மாற்றியது. 5 முறை கேப்டனாக இருந்து கோப்பையை வென்றுகொடுத்தவர் என்பதை கூட மறந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இது ரசிகர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


அதேபோல்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்றாலும் அந்த அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் விராட் கோலி. விராட் கோலியும் கேப்டனாக இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வழிநடத்தியவர். கடந்த இரண்டு சீசன்களாக சாதாரண வீரராக களமிறங்கும் கோலி, நடப்பு சீசனிலும்  சாதாரண வீரராகத்தான் களம் காண இருக்கிறார். 


இந்நிலையில் தான் கேப்டனாக தங்கள் அணியை வழிநடத்திய எம்.எஸ். தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கேப்டன்களாக இல்லாமல் ஐ.பி.எல். வரலாற்றில், முதன் முறையாக சாதாரண வீரராக களம் காண இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல் என்றாலே இந்த ஜாம்பவான்களின் பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது. அதுவும் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக கேப்டன்களாக வலம் வந்த இவர்கள் மூன்று பேரும் முதன் முறை சாதாரண வீரர் என்ற பொறுப்பில் அணியில் விளையாட இருப்பது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!