ஐ.பி.எல். 2024ம் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்த நிலையில், நேற்றைய போட்டி நடக்காவிட்டாலும் ஒரு புள்ளியை பெற்ற சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை பெற்றது.
லக்னோ - மும்பை மோதல்:
இந்த நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் முக்கியமான போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே 9 போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறிவிட்டது. இதனால், இந்த போட்டியின் முடிவு மும்பை அணிக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாது. ஆனால், அதேசமயம் இந்த தொடரில் மும்பை அணி ஆடும் கடைசி போட்டி இதுவாகும். இதனால், இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் முடிக்க மும்பை அணி முயற்சிக்கும்.
கடைசி மோதல்:
லக்னோ அணியைப் பொறுத்தவரை ப்ளே ஆஃப் வாய்ப்பு என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகவே உள்ளது. அவர்கள் கடைசியாக ஆடிய இரண்டு போட்டியிலும் தோல்வியைத் தழுவினர். லக்னோ அணியும், ஆர்.சி.பி.யும் 6 போட்டிகள் வெற்றியுடன் இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ஆர்.சி.பி. முன்னால் இருக்கிறது.
லக்னோ அணி மைனஸ் ரன் ரேட்டுடன் இருப்பதால் அவர்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் அவர்கள் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமின்றி அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். லக்னோ அணிக்கும் இன்றைய போட்டி கடைசி போட்டி என்பதால் அவர்களும் வெற்றி பெற முயற்சிப்பார்கள்.
இரு அணிகளின் பலம் என்ன?
மும்பை அணியைப் பொறுத்தவரை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் பேட்டிங்கில் பலமாக ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா, இஷன் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் பலமாக உள்ளனர். ரோகித் சர்மா இந்த தொடரில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரை மும்பைக்கு பெரும் பலமாக பும்ரா உள்ளார். பியூஷ் சாவ்லா, கோயிட்ஸி, முகமது நபி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் பந்துவீச்சில் முக்கிய அம்சமாக உள்ளனர்.
கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கும் லக்னோ அணியில் குயின்டின் டி காக், ஸ்டோய்னிஸ், பூரண், பதோனி, குருணல் பாண்ட்யா பேட்டிங்கில் பலமாக உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பிஷ்னோய், நவீன் உல் ஹக், மோஷின் கான், யஷ் தாக்கூர் பந்துவீச்சில் முக்கிய வீரர்களாக உள்ளனர்.
நேருக்கு நேர்:
இரு அணிகளிலும் ஆடும் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பலர் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர். இதனால், இந்த போட்டியில் அதிரடியாக ஆட பேட்ஸ்மேன்களும், சிறப்பாக பந்துவீச பந்துவீச்சாளர்களும் முயற்சிப்பார்கள்.
இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் லக்னோ அணி 4 போட்டியிலும், மும்பை அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர். லக்னோ அணி அதிகபட்சமாக 199 ரன்களையும், மும்பை அணி அதிகபட்சமாக 182 ரன்களையும் விளாசியுள்ளனர். குறைந்தபட்சமாக லக்னோ 101 ரன்களையும், மும்பை 132 ரன்களையும் எடுத்துள்ளது.
மேலும் படிக்க: IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
மேலும் படிக்க: MS Dhoni: CSK ரசிகர்கள் நெஞ்சில் விழுந்த இடி..RCB க்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டாரா?