IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: குஜராத் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், சன்ரைசர்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுவதாக இருந்தது. இந்த போட்டி நடத்தப்படாததால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதியாக இந்த அணி 2020ஆம் ஆண்டு ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தினைக் காண, ஐபிஎல் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்ததால், இன்றும் மழை தொடர்ந்தது. மேலும் விளையாட்டு நேரத்தில் மழை இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை விட்டு விட்டு வந்ததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதுமட்டும் இல்லாமல், குஜராத் அணிக்கு நடப்பு தொடரில் தனது கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை மழை தடுத்துவிட்டது என்றே கூறவேண்டும். இதற்கு முந்தைய ஆட்டத்தில் குஜராத் அணி தனது சொந்த மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளயாடுவதாக இருந்தது. ஆனால் அங்கும் மழை பெய்யவே ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்றைய ஆட்டத்தினைப் போல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக குஜராத் அணி நடப்புத் தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணி நடப்புத் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் சந்தித்தது. இதுமட்டும் இல்லாமல் இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.
ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி, 7இல் வெற்றியும் 5இல் தோல்வியும் சந்தித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 15 புள்ளிகளைப் பெற்று நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது அணியாக ப்ளேஆஃப் சுற்றுக்கு தேர்வாகியுள்ளது. ஹைதராபாத் அணி வரும் 19ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தினைப் பிடித்து, கொல்கத்தா அணிக்கு எதிராக குவாலிஃபயரில் விளையாடும் வாய்ப்பினைப் பெறும்.