ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில் ப்ளே ஆப் சுற்றுக்கான போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ள போட்டி மே 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.


இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா  விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடருக்கு விசா பெறுவதற்காக இலங்கைக்கு சென்றார் பத்திரனா. பின்னர் இந்தியாவிற்கு வந்த அவர் ஒரு சில போட்டிகளில் விளையாடினார். இதனிடையே கடந்த மே 5 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.


ஆனால் இந்த போட்டியில் மதீஷா பத்திரனா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா தொடையின் தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் இலங்கை திரும்புகிறார்.


வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் 2024 இல் ஆறு போட்டிகளில் விளையாடி 7.68 எகனாமியில்  13 விக்கெட்டுகளை எடுத்தார். பத்திரனா விரைவில் குணமடைய சென்னை சூப்பர் கிங்ஸ் வாழ்த்துகிறது” என்று கூறப்பட்டிருந்தது. 


முழு உடற்தகுதியை பெற்ற பத்திரனா:






இந்நிலையில் தான் இலங்கை கிரிக்கெட் வாரியம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் மதீஷா பத்திரனா டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கான முழு உடற்தகுதியை பெற்றுள்ளார் என்று கூறியுள்ளது.


இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரே ஒரு லீக் போட்டி மட்டும் தான் இருக்கிறது. இந்த போட்டி மே 18 ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில் பத்திரனா சி.எஸ்.கே அணியில் இணையலாம் என்று கூறப்படுகிறது.


அதேநேரம் டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சியை மேற்கொள்ள மதீஷா பத்திரனா அமெரிக்காவிற்கு சென்று இருக்கலாம் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க: IPL 2024 Playoffs: CSK, RCB என இரு அணிகளும் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புகள் இருக்கு! எப்படின்னு தெரியுமா?


மேலும் படிக்க: Grandmaster Shyam Nikhil : 85-வது கிராண்ட்மாஸ்டர்..அசத்திய தமிழக வீரர் ஷியாம் நிகில்!