ஐ.பி.எல் சீசன் 17- சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக ஐ.பி.எல் சீசன் 17- முதற்கட்ட போட்டி அட்டவணை கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது.
ஐ.பி.எல் சீசன் 17:
அதில் ஏப்ரல் 7 வரையிலான போட்டிகள் மட்டுமே இடம்பெற்றன. இச்சூழலில் தான் இறுதிப் போட்டி எங்கே நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் ஐ.பி.எல் சீசன் 17-ன் இறுதிப் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
பொதுவாக சென்னையில் நடைபெறும் போட்டிகள் என்றாலே ரசிகர்கள் உற்சாகம் அடைந்து விடுவார்கள். அந்த வகையில் இந்த முறை இறுதிப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
12 வருடங்களுக்கு பிறகு:
இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு இதே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் சுரேஷ் ரெய்னா 38 பந்துகளில் 73 ரன்களை விளாசினார். பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
அந்த அணியின் கேப்டன் காம்பீர் சொதப்பினாலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய மன்விந்தேர் பிஸ்லா 89 ரன்களை விளாசினார். அதேபோல் காலீஸ் 69 ரன்களை விளாசினர். இவ்வாறாக 19.4 ஓவர்களிலேயே கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா அணி.
இந்நிலையில் தான் இந்த 17 வது சீசனின் இறுதிப் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனால் எந்த அணி இறுதிப் போட்டியில் விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் விளையாடினால் சி.எஸ்.கே ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
மேலும் படிக்க: IPL 2024 Playoffs: நடப்பு ஐ.பி.எல்.லின் பிளே ஆஃப், இறுதிப்போட்டி எங்கே? வெளியான முக்கிய தகவல்!
மேலும் படிக்க: IPL 2024 Full Schedule:ஐ.பி.எல் சீசன் 17...வெளியானது முழு அட்டவணை! இறுதிப் போட்டி எங்கே தெரியுமா?