நடப்பு ஐ.பி.எல்.தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 15 ஆண்டுகால ஐ.பி.எல். வரலாற்றில் பெரும்பாலான தொடர்களில் பெரும்பாலான போட்டிகளில் ஆட்டத்தை மாற்றிய வீரர்களே வெளிநாட்டு வீரர்களும், இந்திய அணிக்காக நட்சத்திரங்களாக ஜொலித்த வீரர்களுமே இருந்தனர். அதற்கு கெயில், டிவிலியர்ஸ், பொல்லார்ட், பிராவோ, பட்லர் போன்ற வெளிநாட்டு வீரர்களும், சச்சின், தோனி, விராட்கோலி, ரோகித்சர்மா போன்ற இந்திய வீரர்களும் உதாரணம்.


இளம் வீரர்கள் ஆதிக்கம்:


கடந்த கால சீசன்களில் இளம் வீரர்கள் சிறப்பாக ஆடினாலும் தொடர் முழுவதும் இளம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்களா? என்றால் அது கேள்விக்குறி என்றே கூறலாம். ஆனால், நடப்பு ஐ.பி.எல். தொடர் அனைத்திற்கும் மாற்றாக அமைந்துள்ளது. இந்த சீசன் தொடங்கி இதுவரை 14 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இளம் வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


நேற்று நடந்த கொல்கத்தா – குஜராத் போட்டியில் வெற்றிக்கு கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நேரத்தில் ரிங்குசிங் 5 சிக்ஸர்களை விளாசி அசாத்தியமான வெற்றியை கொல்கத்தாவிற்கு சாத்தியமாக்கியதே இந்த தொடரில் இளம் வீரர்கள் எந்தளவு ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதற்கு தனி உதாரணம்.


அசத்தும் இளைஞர் பட்டாளம்:


இவர் மட்டுமின்றி பஞ்சாபில் பிரப்சிம்ரன், குஜராத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய்சுதர்சன், விஜய்சங்கர், ராகுல் திவேதியா, பஞ்சாப் அணிக்காக ஆடும் ஜிதேஷ் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக்வர்மா, ஹைதராபாத் அணியில் மார்கண்டேயா, லக்னோவில் பதோனி, மோஷின்கான், பஞ்சாபில் ஷாரூக்கான், ராகுல்சாஹர், ராஜஸ்தான் அணியில் ஜெய்ஷ்வால், கொல்கத்தாவில் சிக்ஸர் சிங் ரிங்குசிங்குடன் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ்ராணா என்று நாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவர்களில் பெரும்பாலோனார் இந்திய அணிக்காக ஆடாதவர்கள்.


இந்த ஐ.பி.எல். தொடரால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று சில விமர்சனங்கள் எழுந்தபோது, இந்திய அணியின் எதிர்கால வீரர்களை கண்டறிவதற்காகவே இந்த ஐ.பி.எல். தொடங்கப்பட்டதாக கூறினர். உண்மையில் இந்த தொடரில் இளம் வீரர்கள் ஆடும் விதத்தை பார்க்கும்போது அந்த நோக்கம் நிறைவேறுகிறது என்பதை உணர முடிகிறது.


இந்திய அணிக்கு ஆட வாய்ப்பு:


தொடர்ந்து வரும் போட்டிகளில் இளம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவதுடன் ஆட்டத்தையே மாற்றுவதை பார்க்க வேண்டும் என்றே ரசிகர்களும் விரும்புகின்றனர். இவர்களுக்கு இந்திய அணியிலும் விரைவில் இடம் கிடைக்கும் என்று நம்புவோம். ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம் ஹர்திக்பாண்ட்யா, குருணால்பாண்ட்யா, ருதுராஜ் கெய்க்வாட், நடராஜன், ஷர்துல்தாக்கூர், சுப்மன்கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Dhoni's IPL Captaincy: ”தோனிக்கு எதிராக விளையாடும்போது எரிச்சலாக இருக்கும்” - முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்னது என்ன?


மேலும் படிக்க: Rinku Singh: கொல்கத்தாவின் ஆபத்பாந்தவன் 'ரிங்குசிங்'..! சிலிண்டர் டெலிவரி மேனின் மகன் சிக்ஸர் ஹீரோ ஆனது எப்படி?