ஐபிஎல் தொடரில் தோனிக்கு எதிராக விளையாடும்போது எரிச்சலாக இருக்கும் என, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அவருடைய எண்ணங்கள் சக வீரர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும் எனவும் கூறினார்.


ஐபிஎல் தொடரில் தோனி:


சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 41 வயதான தோனியிடம் பேட்டிங்கில் முன்பு இருந்த ஃபார்மை தற்போது காண முடியாவிட்டாலும், கேப்டன்சியில் அவருக்கு நிகரான வேறு ஒருவர் இல்லை என்பதே உண்மை. அதன் காரணமாகவே ஐபிஎல் வரலாற்றில் இன்றளவும் தோனி சிறந்த கேப்டனாக திகழ்கிறார்.  இந்நிலையில், அவர் எந்த அளவிற்கு மதிநுட்பம் மிக்கவர் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா விளக்கியுள்ளார்.


தோனிக்கு எதிராக விளையாடுவது எரிச்சலாக இருக்கும்:


போட்டிகளுக்கு முன்பாக ஜியோ சினிமா செயலியில் நடைபெறும் விவாதத்தின் போதுதான், தோனி உடனான தனது அனுபவத்தை உத்தப்பா பகிர்ந்தார். அதன்படி,  ”நான் சிஎஸ்கே-விற்கு எதிராக விளையாடியபோது, ​​நான் மிகவும் கோபமாக இருப்பேன். தோனியின் செயல்பாட்டால் மிகவும் எரிச்சல் அடைந்தேன். ஒரு போட்டியின்போது ஹேசில்வுட் எனக்கு பந்து வீசும்போது  ஃபைன் லெக்கில் பீல்டர் இல்லை. அதனால் அவர் அவுட்சைட் ஆஃப் திசையில்  தான் பந்து வீசுவார் என்று எனக்குத் தெரியும். இதனால் டீப் பாயிண்டில் அடித்து பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தேன். வழக்கமாக எந்த திசையில் நீங்கள் விளையாடமாட்டீர்களோ அந்த திசையில் உங்களை விளையாட பீல்டிங் மூலம் தோனி கட்டாயப்படுத்துவார். அவர் பேட்ஸ்மேன்களின் மனதுடன் விளையாடுவார்.  பேட்ஸ்மேன்களை மட்டும் அல்ல, பந்துவீச்சாளர்களையும் வித்தியாசமாக சிந்திக்கும்படி தோனி கட்டாயப்படுத்துவார்.


எங்கிருந்து தான் யோசிப்பாரோ?


விக்கெட்-டேக்கிங் ஆப்ஷனை எங்கு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை பந்து வீச்சாளர் மனதில் தோனி எழ வைக்கிறார். அதற்கு உதாரணமாக, ”தேவ்தத் பிக்-அப் ஷாட்டை நன்றாக ஆடுவார். அதனால்  'சரி, அந்த ஷாட்டை ஆடும்படி பீல்டிங் அமைத்து தேவ்தத்தை கட்டாயப்படுத்துவோம்' என்றார். அதன்படி ஃபைன் லெக்கை ஒரு லெக்-கல்லி மாதிரியான நிலைக்கு தோனி கொண்டு வந்தார். இதையெல்லாம் பார்த்த பிறகு, இதுபோன்ற எண்ணங்களை எல்லாம் இந்த மனிதன் எங்கிருந்துதான் கொண்டு வருகிறார் என நினைத்தேன்” என்று உத்தப்பா குறிப்பிட்டுள்ளார்.


ஐபிஎல் தொடரில் உத்தப்பா:


2021ம் ஆண்டு சென்னை அணியில் இணைந்த உத்தப்பா, தோனியின் தலைமையில் 16 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  ஐபிஎல் வரலாற்ரில் மொத்தம் 205 போட்டிகளில் விளையாடியுள்ள உத்தப்பா, 4,952 ரன்களை குவித்துள்ளார்.