ஐபிஎல் போட்டியின் சிறப்புகளில் ஒன்று உள்ளூர் திறமைசாலி தொடங்கி சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தியவர்கள் வரை அனைவரும் ஒரு அணியாக இணைந்து அணியின் வெற்றிக்கு விளையாடுவது தான். அப்படியான இந்த தொடரில் பல சாதனைகளை பல்வேறு இளம் வீரர்கள் படைத்துள்ளனர். அப்படியான ஒரு சாதனையை நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் நிகழ்த்தினார்.
அந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறவே பெறாது என அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்தனர். கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இருந்தனர். கடைசி ஓவரை குஜராத் அணியின் பந்து வீச்சாளர் யாஷ் டயால் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுக்க, ஸ்டைரைக்கிற்கு ரிங்கு சிங் சென்றார். இப்போது அனைவரது பார்வையும் ரிங்கு மீது தான் இருந்தது. அவர் கொல்கத்தாவிற்கு வெற்றியை பெற்றுத் தருவாரா என்பது தான். கடைசி ஐந்து பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஐந்து பந்துகளை எதிர்கொண்ட ரிங்கு சிங் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்டு கொல்கத்தா அணியினை வெற்றி பெற வைத்தார்.
ரிங்கு சிங் கடைசி பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டதும், கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தனது விரலை நீட்டியபடி மைதானத்திற்குள் முதல் நபராக ஓடி வந்து ரிங்கு சிங்கை கட்டிப்பிடித்தார். எதிர் முனையில் ஓடிவந்த ரிங்கு சிங்கும் தனது மார்பில் தட்டியபடி ராணாவை நோக்கி ஓடி வந்தார். அதன் பின்னர் கொல்கத்தா வீரர்கள் ரிங்குவை சூழ்ந்து கொண்டார்கள்.
வெற்றிக் கொண்டாட்டத்திற்குப் பின்னர், கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா கூறியது தான் மிகவும் முக்கியமான டாப்பிக்காக தற்போது மாறியுள்ளது. ரிங்கு சிங் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்களை விரட்டியது என்னுடை பேட்டில் என அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ”நான் சையது முஸ்டாக் அலி போட்டித் தொடரிலும், கடந்த ஆண்டு நான்கைந்து போட்டிகளிலும், இந்த சீசனில் இரண்டு போட்டிகளிலும் நான் இந்த பேட்டில் தான் விளையாடினேன். எனது பேட்டை ரிங்கு கேட்ட போது நான் அவருக்கு அதனைத் தரவில்லை. இன்றைய போட்டிக்கு நாங்கள் மைதானத்திற்கு வரும் போது யாரோ ஒருவர் இந்த பேட்டை கொண்டு வந்துள்ளனர்.” என்றார்.
” இந்த பேட்டை அவர் எடுத்து விளையாடுவார் என நினைத்தேன். அதேபோல், அவர் அந்த பேட்டை எடுத்துக்கொண்டு மைதானத்திற்குள் சென்றார். இது தற்போது என்னுடைய பேட் எனக் கூறுவது சரியாக இருக்காது. இந்த பேட் ரிங்கு சிங்குடையது” எனவும் அவர் கூறியுள்ளார்.