குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தாவிற்கு த்ரில் வெற்றியை பெற்று தந்த ரிங்கு சிங் ஒட்டுமொத்த ஐ.பி.எல். ரசிகர்களின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார். வெற்றிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டபோது கடைசி 5 பந்தில் 5 சிக்ஸர்களை விளாசி நம்ப முடியாத வெற்றியை கொல்கத்தாவிற்கு தனி ஆளாக அளித்துள்ளார்.
”யார்ரா இந்த பையன்?”:
குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற கொல்கத்தா அணிக்கு, கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், குஜராத்திற்கான வெற்றி என்பது உறுதியாகிவிட்டது எனவே அனைவரும் கருதினர். கொல்கத்தா அணியின் பெரும்பாலான ரசிகர்களும் கூட, போட்டி முடிந்துவிட்டது என தொலைக்காட்சியை கூட ஆஃப் செய்திருக்க வாய்ப்புள்ளது.
ஆனால், மைதானத்தில் இருந்த ஒரு இளைஞர் மட்டும் வெற்றி இன்னும் என் கையை விட்டு சென்றுவிடவில்லை என்ற மன உறுதியுடன் இருந்தார். அந்த உறுதியை தனது திறமை மூலம் வெளிப்படுத்தி, கடைசி 5 பந்துகளையும் சிக்சர்களாக விளாசி சாத்தியமே இல்லாத ஒரு அசாத்திய வெற்றியை ஒட்டுமொத்த கொல்கத்தா அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் ஞாயிறு பரிசாக வழங்கினார். மைதானத்தில் இருந்தும், தொலைக்காட்சி வாயிலாகவும் இந்த போட்டியை கண்ட அனைவரும் மிரட்சியடைந்து கேட்ட ஒரே கேள்வி “யார்ரா இந்த பையன்?” என்பது தான். இப்படி அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்த அந்த இளைஞரின் பெயர் ”ரிங்கு சிங்”.
யார் இந்த ரிங்கு சிங்:
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்த கன்சந்த்ரா சிங் என்பவருக்கு பிறந்த 5 குழந்தைகளில், மூன்றாவது நபர் தான் ரிங்கு சிங். ஒரு சிறிய வீட்டில் தனது குழந்தை பருவத்தை கடந்த ரிங்கு சிங், கிரிக்கெட்டை தனது வாழ்க்கையாக மாற்றிக்கொள்வதற்கு முன்பு, குடும்பத்திற்கு பொருளாதார உதவிகளை செய்ய தூய்மைப்பணியாளராக சேர முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், கிரிக்கெட்டின் மீது இருந்த ஆர்வம் அவரை முழுமையாக அதன் மீது கவனம் செலுத்த தூண்டியது.
உள்ளூர் போட்டிகளில் ரிங்கு சிங்:
கடந்த 2016ம் ஆண்டு தனது 16 வயதில் உத்தரபிரதேசத்திற்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ரிங்கு சிங் அறிமுகமானார். அந்த போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் என்பது ரிங்கு சிங் எடுத்த 83 ரன்கள் தான். அதே ஆண்டில் ரஞ்சி டிராபி மூலம் உத்தரபிரதேச அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டியிலும் கால்தடம் பதித்தார். 2018-19 ரஞ்சி டிராபி தொடரில் குரூப் ஸ்டேஜ் முடிவில் 9 போட்டிகளில் 803 ரன்களை சேர்த்து, அந்த தொடரில் அந்த அணிக்காக அதிக ரன் குவித்த வீரராக திகழ்ந்தார். அந்த தொடரின் முடிவில் 10 போட்டிகளின் முடிவில் ரிங்கு சிங் 953 ரன்களை குவித்தார். 16,19 மற்றும் 23வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் உத்தரபிரதேச அணி சார்பிலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் மத்திய மண்டலம் சார்பிலும் விளையாடியுள்ளார்.
ஐபிஎல்லுக்குள் கொண்டு வந்த கொல்கத்தா:
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த ரிங்கு சிங்கை, கடந்த 2018ம் ஆண்டு கொல்கத்தா அணி ரூ.80 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது. அந்த தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ரிங்கு பெரிதாக சோபிக்கவில்லை. 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளிலும் ஒரு சில போட்டிகளிலேயே ரிங்கு சிங் களமிறக்கப்படார். 2021ம் ஆண்டு அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து கொல்கத்தா அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதோடு, ஐபிஎல் போட்டிகள் இல்லாத காலத்திலும், கேகேஆர் கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்து பயிற்சி எடுத்து, தன்னை தானே மெருகேற்றிக்கொண்டார்.
கவனம் ஈர்த்த ரிங்கு சிங்:
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் ரிங்கு சிங் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பெரும்பாலும் பின்வரிசையில் களமிறங்கிய இவர் ஒரு பினிஷராகவே கருதப்பட்டார். கடந்த தொடரில் குஜராத் அணிக்கு எதிராக களமிறங்கி 35 ரன்களை சேர்த்து அசத்தினார். குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 42 ரன்களை சேர்த்து கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதைதொடர்ந்து, அந்த தொடரின் முடிவில் 7 போட்டிகளில் விளையாடி 174 ரன்களை சேர்த்தார்.
நடப்பு தொடரிலும் அசத்தல்:
ரிங்குவின் அபார ஆட்டத்தால் நடப்பு தொடரில் கொல்கத்தா பிளேயிங் லெவனில் தற்போது முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சொதப்பினாலும், பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா அணியை வெற்றி பெறச்செய்துள்ளார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ள, 26 வயதான ரிங்கு சிங் நிச்சயம் ஒருநாள் இந்திய அணியிலும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.