IPL 2023: ஐபிஎல் தொடர் இன்று இரவு நடைபெறவுள்ள சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரும் தனக்குள் மிகவும் சுவாரஸ்யமான கதைகளைக் கொண்டு தான் உள்ளது. அவ்வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அனைவரையும் ஆச்சரியப்படவைக்கும் வகையில் பலருக்கு ரீ-எண்ட்ரி வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது. அவர்கள் யார் யார் என்பது குறித்தும் அவர்களின் பங்களிப்பு குறித்தும் காணலாம். 


பியூஷ் சாவ்லா - மும்பை இந்தியன்ஸ்


கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பியூஷ் சாவ்லா  பெயர் அறிவிக்கப்பட்டபோது அவரை ஏலத்தில் எடுக்க முன்வந்த அணி மும்பை இந்தியன்ஸ் தான். மற்ற அணிகள் யாரும் அவரை எடுக்க முன் வராததால் அவரை அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்கு வாங்கியது. அப்போது பலரும் யோசித்தார்கள், 2022ஆம் ஆண்டு ஐபிஎல் விளையாடத பியூஷ் என்ன செய்திடுவார் என அனைவரும் நினைத்து அவரை எடுக்காததற்கு, அவர்களுக்கு எதிராக பந்து வீசும்போது பதிலடி கொடுத்தார். இந்த ஆண்டு மும்பை அணியில் இருந்த பெரிய பிரச்னை பவுலிங் தான். அதேநேரத்தில் மும்பை அணிக்கு பந்து வீச்சு சார்பில் இருந்த ஒற்றை நம்பிக்கை பியூஷ் சாவ்லா. அதிரடி பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்த இவர் இந்த சீசனில் 22 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். 


அஜிங்கியா ரஹானே - சென்னை சூப்பர் கிங்ஸ்


ஒரு காலகட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ரஹானேவை சென்னை அணி அவரின் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்கு வாங்கிய போது, சென்னை ரசிகர்களே புலம்பியது, ”நாம் என்ன டெஸ்ட் போட்டியா விளையாட போறோம்” என்பது தான். ஆனால் அவர் மீது இருந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தக்க பதிலடிகளை தனது பேட்டில் இருந்து பறக்க விட்ட சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளின் மூலம் மைதானம் முழுவதும் அனுப்பி வைத்தார். இந்த ஆண்டு இதுவரை 10 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள இவர் இரண்டு அரைசதங்கள் உட்பட 299 ரன்கள் சேர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக மும்பை அணிக்கு எதிரான இவரது ருத்ரதாண்டவ ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தனக்கான இடத்தினை மீண்டும் பிடித்தார். அதவது ஜீன் மாதம் 7ஆம் தேதி தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 


மோஹித் சர்மா - குஜராத் டைட்டன்ஸ்


நடப்புச் சாம்பியன் குஜராத் அணியால் கடந்த ஆண்டு அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மிதவேகப் பந்து வீச்சாளர் மோஹித் சர்மா. இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் இரண்டு முறை 4 விக்கெட்டுகளும், ஒரு முறை 5 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் மோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். 


இஷாந்த் சர்மா  - டெல்லி கேப்பிடல்ஸ்


இஷாந்த் சர்மாவும் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்த சீசனில் 8 போட்டிகளில் களமிறங்கி 25 ஓவர்கள் பந்து வீசி 205 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். டெல்லி அணி இவரது அனுபவ பந்து வீச்சினால் ஒரு சில போட்டியை வென்றுள்ளது.