ஐபிஎல்.. ஐபிஎல்.. ஐபிஎல்.. கடந்த இரண்டு மாதங்களாக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமுமே உச்சரித்துக் கொண்டிருந்த ஒற்றைச் சொல் ஐபிஎல். கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் முடிவடைகிறது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இத்துடன் 16 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்த ஒரு ரவுண்டப் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 


சென்னை, மும்பை, குஜராத், ராஜஸ்தான், பெங்களூரு, ஹைதராபாத், பஞ்சாப், லக்னோ, டெல்லி மற்றும் கொல்கத்தா என மொத்தம் 10 அணிகள் களமிறங்கின. ஒவ்வொரு அணியும் கோப்பையை நோக்கிய பயணத்தில் தங்களால் முடிந்ததைச் செய்தனர். ஒரு சில அணிகளுக்கு இந்த சீசன் மிகவும் சிறப்பாக சென்றது. ஆனால் ஒரு சில அணிகளுக்கு இதுபோன்ற ஒரு சீசன் மீண்டும் தங்களுக்கு வரவே கூடாது என யோசிக்கும் அளவிற்கு அமைந்து விட்டது. 


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழக்காமாக ஐபிஎல் போட்டிகளை மோதிக்கொள்ளும் அணிகளில் ஏதாவது ஒரு அணியின் சொந்த மைதானத்தில் நடத்தும். இதனால் வடகிழக்கு இந்தியா பகுதிகளில் மக்கள் ஐபிஎல் போன்ற மிகவும் முக்கியமான தொடரை நேரில் காணும் வாய்ப்பினை இழப்பது போன்று இருந்தது. அவர்களுக்கும் ஐபிஎல் தொடரை பார்க்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் மைதானங்களை தயார் செய்ததுடன் போட்டிகளையும் நடத்தியது. அதன் அடிப்படையில் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், அகமாதாபாத், டெல்லி, கொல்கத்தா, மொஹாலி, ஜெய்ப்பூர், லக்னோ, கவுஹாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய மைதாங்களில் போட்டியை நடத்தியது. இதனால் மைதானம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரமாக வந்து போட்டியை கண்டு ரசித்தனர். 


வழக்கமாக இதற்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் அதிகப்படியான இந்திய வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். புதிய வீரர்கள் தங்களுக்கான அடையாளங்களை ஏற்படுத்திக்கொண்டதுடன், இனி அவ்வளவு தான் இவர்களால் கம் பேக் கொடுக்க முடியாது என கூறப்பட்ட பல வீரர்கள் கம்பேக் கொடுத்துள்ளனர். கம்பேக் கொடுத்த வீரர்களில் குறிப்பாக குஜராத் அணியின் மொகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்யூஷ் சாவ்லா, டெல்லி அணியின் இஷாந்த் சர்மா மற்றும் சென்னை அணியின் ரஹானே ஆகியோரது கம்பேக் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது. குறிப்பாக ரஹானேவின் கம்பேக் அவருக்கு உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. 


அதேபோல் இளம் வீரர்கள் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோரது ஆட்டம் இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால நட்சத்திரங்காளாக இவர்கள் வலம் வருவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக்ட் ப்ளேயர் விதி, நோ - பால் மற்றும் வைடுக்கு ரிவ்யூவ் செய்வது, பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அவுட்- ஃபீல்டில் ஃபீல்டர்களின் எண்ணிக்கை 4ஆக குறைப்பது என புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருந்தது பிசிசிஐ நிர்வாகம்.