ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அதனை அடுத்து, இரவு தொடங்கிய போட்டியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்திருக்கிறது.
முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, டுப்ளிசி, அனுஜ் ராவாத் ஓப்பனிங் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே அனுஜ் டக் அவுட்டாக, டுப்ளிசி 8 ரன்களுக்கு வெளியேறினார். அவரை அடுத்து களமிறங்கிய விராட் கோலி 12 ரன்களுக்கு வெளியேற, மேக்ஸ்வெல் களத்தில் நின்று அரை சதம் கடந்தார். இதனால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. மேக்ஸ்வெல் வெளியேறிய பிறகு, சுயாஷ் 6 ரன்களுக்கு வெளியேறினார். கடைசியாக களத்தில் நின்ற சபாஸ் அகமது 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஒரு புறம் களத்தில் நிற்க, ஏழாவது பேட்டராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார்.
5 சிக்சர், 5 பவுண்டர்கள் என 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை நாட்-அவுட்டாக இருந்தார். தினேஷ் கார்த்திக்கின் இந்த மீட்பர் இன்னிங்ஸால் பெங்களூரு அணியின் ஸ்கோர் 150-ஐ தாண்டியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருக்கிறது. சவாலான இலக்கை நோக்கி களமிறங்கும் டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம் என்பதால், சேஸிங்கில் அதிரடி காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்