ஐ.பி.எல் 2011:
ஐபிஎல் தொடர்பாக நாம் ஏற்கனவே ஐபிஎல் ரீகேப் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டு குறித்தும் விரிவான ரீவைண்ட் கட்டுரைகளை ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர்பாக விரிவான ரீவைண்டை இந்த தொகுப்பில் காணலாம்.
இறுதி போட்டியில் மோதிய சி.எஸ்.கே - ஆர்.சி.பி:
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடர் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது. அதற்கான முக்கிய காரணம் அந்த சீசனில் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. அந்த அண்டு மிகவும் வலிமையான அணியாக இருந்தது பெங்களூர் அணி. கிறிஸ் கெய்ல், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், திவாரி, ஜாகிர் கான் உள்ளிட்டோர் பெங்களூர் அணிக்காக விளையாடினார்கள். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹஸ்ஸி, முரளி விஜய், எம்.எஸ்.தோனி, ரெய்னா, ப்ராவோ உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தனர். அதனால், இறுதி போட்டி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
வானவேடிக்கை காட்டிய முரளி விஜய்:
இரண்டாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுமா? அல்லது முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வெல்லுமா? என்ற கேள்விகள் எழுந்தன. அதன்படி, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ஸி மற்றும் முரளி விஜய் களம் இறங்கினார்கள். இருவரும் விளையாடிய அந்த ஆட்டம் எப்போதும் ரசிகர்களின் நினைவில் இருக்கும். அப்படி ஒரு ஆட்டம் ஆடினார்கள். தொடக்க ஆட்டக்காரர்களே அடித்து நொறுக்கிய ஆட்டமாக அந்த ஆட்டம் இருந்தது.
அதன்படி, ஹஸ்ஸி 45 பந்துகளில் 3 பவுண்டரிகள் , 3 சிக்ஸர்கள் என மொத்தம் 63 ரன்களை குவித்தார். அதேபோல், முரளி விஜய் 52 பந்துகள் களத்தில் நின்று 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை பறக்க விட்டார். அந்த வகையில் மொத்தம் 95 ரன்களை குவித்து பெங்களூர் அணியை மிரட்டினார். இவ்வாறாக சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்தது. பின்னர், 206 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது.
சொதப்பிய பெங்களூர் அணி:
மற்ற போட்டிகளில் ஓரளவிற்கு நன்றாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதிப் போட்டியில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் டக் அவுட் ஆகி வெளியேற மயங் அகர்வால் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் வந்த விராட் கோலி 35 ரன்கள் எடுக்க டிவில்லியர்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க பெங்களூர் அணி திணறியது. செளரப் திவாரி அதிரடியாக விளையாடி 42 ரன்கள் எடுத்தார் ஆனால் அவருடன் ஜோடி சேர்ந்த மற்ற வீரர்கள் எல்லாம் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே எடுத்தது பெங்களூர் அணி.
இந்த போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி பெங்களூர் அணியின் ஐ.பி.எல் கோப்பை கனவை பொய்யாக்கியது. அதன்படி இரண்டாவது முறையாக ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதேநேரம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கோப்பையை நோக்கி பயணிக்கும் பெங்களூர் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக ரன்கள் எடுத்த வீரர்:
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்ல். அந்த சீசனில் மட்டும் அவர் 608 ரன்களை குவித்தார்.
அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்:
அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் மலிங்கா. மொத்தம் 28 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேன் ஆப் தி மேட்ச்:
2011 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் மேன் ஆப் தி மேட்ச் விருதை பெற்றவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் முரளி விஜய்.
ஆரஞ்சு தொப்பி:
ஆரஞ்சு நிற தொப்பி கிற்ஸ் கெய்ல்-க்கு தான் வழங்கப்பட்டது.
மேன் ஆப் தி சீரிஸ்:
மேன் ஆப் தி சீரிஸ் விருதை வென்றவர் பெங்களூர் அணி வீரர் கிறிஸ் ஹெய்ல். இந்த சீசனில் 608 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!