2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வெள்ளிக்கிழமை சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தச் சூழலில் சென்னை அணியின் வீரர்கள் மற்றும் ஐபிஎல் கோப்பை இன்று இந்தியா வந்தது. இந்தியா வந்த ஐபிஎல் கோப்பை சென்னை திநகரிலுள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் பூஜை செய்யப்பட்டது.
இந்த பூஜை இந்தியா சிமிண்ட்ஸ் ஶ்ரீனிவாசன் மற்றும் அவருடைய மகளும் இந்திய சிமிண்ட்ஸ் தலைவருமான ரூபா குருநாத் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இந்தப் பூஜைக்கு பின் ஐபிஎல் கோப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இடத்திற்கு எடுத்த செல்லப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணி கோப்பை வென்றது தொடர்பாக இந்தியா சிமிண்ட்ஸ் ஶ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை அணி குவாலிஃபையர் மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடிய போது மைதானம் முழுவதும் சென்னை ரசிகர்கள் நிரம்பி இருந்தனர். மைதானம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் தென்பட்டது. அதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சென்னையையும் தோனியையும் எப்போதும் பிரிக்க முடியாது. தோனி தான் சென்னை, சென்னை அணி தான் தோனி என்பது போல் இரண்டு ஒன்றோடு ஒன்றாக உள்ளது.
இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டிற்கே ஒரு பாடமாக அமைந்துள்ளது. டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு தோனி உள்ளிட்ட சென்னை வீரர்கள் இந்தியா வந்த பிறகு சென்னையில் ஒரு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார். இந்த விழா சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும்" எனக் கூறியுள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் யுஏஇயில் நடத்தி முடிக்கப்பட்டது. இதனால் சென்னையில் தோனி விளையாடுவதை பார்க்க முடியவில்லை என்று கூறி வருந்தினர். அவர்களின் வருத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் அடுத்த மாதம் சென்னை எம்.ஏ.சி மைதானத்தில் தோனியை காணும் வாய்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஷிகர்தவானை இமிடேட் செய்த கோலி - பேட்டிங்கில் மட்டுமின்றி நடிப்பிலும் "கிங்"தான் கோலி...!