இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. பேட்டிங் செய்யும்போதும், களத்தில இறங்கிவிட்டாலும் மிகுந்த ஆக்ரோஷம் மிக்க வீரர் என்ற பெயர் பெற்றவர். களத்தில் எந்தளவிற்கு ஆக்ரோஷமாக உள்ளாரோ, அதே அளவில் அணியின் சக வீரர்களிடம் மிகவும் மகிழ்ச்சியாகவும், நகைச்சுவையாகவும் பழகும் சுபாவம் கொண்டவர். சமூக வலைதளங்களில் அவரது வேடிக்கையான வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில், விராட்கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்திய அணியின் தொடக்க வீரரும், அதிரடி பேட்ஸ்மேனுமாகிய ஷிகர்தவானைப் போலவே பேட் செய்து நடித்துக்காட்டியுள்ளார். அந்த வீடியோவில் ஷிகர் தவானைப் போல நடித்துக் காட்டுவதற்கு முன்பு, “ நான் ஷிகர் தவானைப் போல நடித்துக்காட்டப் போகிறேன். அவர் தனது இடத்தை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன். அவர் பேட்டிங் செய்வதை எதிர்முனையில் இருந்து பார்த்துள்ளேன். அது மிகவும் வேடிக்கையாக இருக்கும். அதனால், நான் அதை செய்கிறேன்.“ என்று கூறி ஷிகர் தவானைப் போல நடித்துக் காட்டுகிறார்.
இடது கையில் பேட்டிங் செய்யும் விராட்கோலி ஷிகர்தவானைப் போல டீ சர்ட்டை சரி செய்து, கையின் மஸ்ல்ஸ் தெரியுமாறு அட்ஜஸ்ட் செய்கிறார். பின்னர், ஷிகர்தவானைப் போலவே பேட்டிங் செய்து விட்டு, அவரைப் போலவே சிரிக்கிறார். விராட்கோலியின் இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் விராட்கோலி சிறந்த நடிகர் என்று அவரது நடிப்புத் திறமையை பாராட்டியுள்ளனர். சிலர் பேட்டிங்கில் மட்டுமல்ல நடிப்பிலும் விராட்கோலி கிங்தான் என்று பாராட்டியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விராட்கோலி தனது அணியினரை போல ஏற்கனவே பல முறை நடித்துக்காட்டியுள்ளார். ஒருமுறை ஹர்பஜன் சிங் போல அவர் கிரிக்கெட் மைதானத்திலே ஹர்பஜன்சிங் போல நடித்துக்காட்டியதும் சமூக வலைதளங்களில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Jyothika Birthday | ஜோ.. ஜோ.. ஜோ.. ஜோதிகா..! விண்டேஜ் ஜோதிகாவின் அழகான புகைப்படங்கள்.!
ஷிகர் தவான் மற்றும் விராட்கோலி இருவரும் டெல்லியை பூர்வீகமாக கொண்ட விளையாட்டு வீரர்கள். இருவரும் தங்களது ஆரம்பகால கிரிக்கெட்டை டெல்லியில்தான் தொடங்கி ஆடினர். இந்திய அணிக்காக விராட்கோலி தலைமையில் ஷிகர்தவான் ஏராளமான போட்டிகளில் ஆடியுள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உலககோப்பை தொடரில் இந்திய அணியில் ஷிகர்தவான் இடம்பெறவில்லை. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் அவருக்கு பதிலாக சுப்மன்கில் மற்றும் இஷான்கிஷானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்