புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரான ரோஹித் ஷர்மா, சமீபத்தில் தனது முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தை நினைவுகூர்ந்தபோது 7,50,000 அமெரிக்க டாலர்கள் என்பது எவ்வளவு என்று கூட எனக்குத் தெரியாது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.


ரோகித் ஷர்மா ஐபிஎல் பயணம்


2008 இல் 4.8 கோடி ரூபாய்க்கு (USD 750,000) இப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தாக இருக்கும், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸால் கைப்பற்றப்பட்ட அப்போதைய 20 வயதான ரோஹித்துக்கு அது ஒரு பெரிய திருப்பு முனையாக இருந்தது. டெக்கான் சார்ஜர்ஸ் அணிகாக ரோஹித்தின் பங்களிப்பு பெரிது. அவர் மூன்று சீசன்களில் 1170 ரன்கள் குவித்தார். அவரது அற்புதமான செயல்திறன் மும்பை இந்தியன்ஸின் கவனத்தை ஈர்த்தது, 2011 இல் அவரை 13 கோடி ரூபாய்க்கு (2 மில்லியன் டாலர்) வாங்கியது. அப்போதிருந்து, ரோஹித் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து வருவதோடு, 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பெருமைக்குரிய கோப்பையை வெல்ல அணியை வழிநடத்தினார்.



எவ்வளவு என்றே எனக்கு தெரியாது


அவரது தலைமையில், மும்பை இந்தியன்ஸ் 2013 இல் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 போட்டியையும் வென்றதுகுறிப்பிடத்தக்கது. தனது முதல் ஐபிஎல் ஏலத்தை பற்றி நினைவு கூர்ந்து பேசும் வகையில், ரோஹித் தான் இவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்ட செய்தியால் வியப்படைந்ததாகவும், புதிதாக கிடைத்த காசை வைத்து எந்த காரை வாங்குவது என்று யோசித்து வந்ததாகவும் தெரிவித்தார். இது குறித்து பேசிய ரோகித் சர்மா, "முதலில், 750,000 அமெரிக்க டாலர்கள் எவ்வளவு என்பது கூட எனக்குத் தெரியாது. ஏலம் போன்ற ஒரு விஷயம் இதுவரை எங்களுக்கு நடந்ததில்லை, அதைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை", என்று கூறினார். 


தொடர்புடைய செய்திகள்: Watch Video: என்னா அடி..! 15 பந்தில் 44 ரன்கள் விளாசல்… பேட்டிங்கில் மிரட்டிய ஷாகின்-ஷா-அப்ரிடி..!


என்ன கார் வாங்கலாம் என்று யோசித்தேன்


மேலும், "எனது எண் ஏலத்தில் மிகவும் தாமதமாக வந்தது, அநேகமாக ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு வந்தது என்று நினைக்கிறேன்", என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ரோஹித் கூறினார். நான் விற்கப்பட்ட பிறகு, எனக்கு 750,000 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது, அப்போதைய ரூபாய் மதிப்பிற்கு அது 3 முதல் 3.5 கோடி என்று நினைக்கிறேன். ஆனால் அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், நான் எந்த காரை வாங்குவது என்று யோசித்தேன். அதுதான் நான் திட்டமிட்டுச் செய்தேன்! அப்போது 20 வயதுதான் எனக்கு", என்றார். 



ஐபிஎல் 2023


ரோஹித் ஷர்மா வரவிருக்கும் ஐபிஎல் 2023 இல் மும்பை இந்தியன்ஸின் கேப்டனாக பத்தாண்டுகளை நிறைவு செய்ய காத்திருக்கிறார். அணியின் லீக் போட்டிகள் ஏப்ரல் 2 ஆம் தேதி பெங்களூரில் தொடங்கவுள்ள நிலையில், அங்கு அவர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோத உள்ளனர். கடைசி தொடரில் 10 அணிகள் கொண்ட அட்டவணையில் கடைசி இடத்தைப் பிடித்த பிறகு, மும்பை இந்தியன்ஸ் கடந்த ஆண்டு மினி-ஏலத்தின் போது கேமரூன் கிரீன் மற்றும் ஜை ரிச்சர்ட்சன் ஆகியோரைச் சேர்த்து தங்கள் அணியை மேம்படுத்த முயற்சித்துள்ளது. இம்முறை சிறப்பான ஆட்டத்தை அவர்களிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.