சனிக்கிழமையன்று பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஷஹீன் அப்ரிடி பேட் மூலம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மட்டுமின்றி அணியினரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கினார்.
பேட்டால் மிரட்டிய ஷஹீன் அஃப்ரிடி
பவுலிங்கில் மிரட்டுவார் என்று அனைவருக்குமே தெரிந்த உலகின் தலைசிறந்த பவுலர் பாகிஸ்தானின் ஷஹீன் அஃப்ரிடி, தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் மிரட்டி இருக்கிறார். கடைசியாக இறங்கி அவர் காண்பித்த அதிரடி அணியின் வெற்றிக்கு உதவி கோப்பையை வெல்ல வைத்தது. இறுதிப்போட்டி முழுதும் ஷஹீனின் ஆளுமையால் நிறைந்திருந்தது.
200 ரன்களை தொட உதவிய ஷஹீன்
அவர் 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்த நிலையில், கடாபி ஸ்டேடியத்தில் முல்தான் சுல்தான்களுக்கு எதிரான போட்டியில் லாகூர் அணி 200 ரன்களை தொட்டது. 293.33 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக ஆடிய அவர், இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசினார். ஷஹீன் பேட்டிங் செய்ய வந்த போது லாகூர் கலண்டர்ஸ் 14.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து கேப்டனிடமிருந்து இரக்கமற்ற அடிகள் விழுந்தன.
பாராட்டிய அணி வீரர்கள்
ஆட்ட முடிவில் ஒரு பெரிய ஸ்கோருக்கு அவர் இழுத்து சென்றார். லாகூர் கலந்தர்ஸின் இன்னிங்ஸ் முடிவடைந்தவுடன், அணியின் வீரர்கள் ஷஹீனின் பங்களிப்பை வெகுவாக பாராட்டினர். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரஷித் கான் டிரஸ்ஸிங் அறைக்கு முன் படிக்கட்டுகளில் காத்திருந்து ஷாஹீனைவரவேற்க மற்ற வீரர்களும் அவருடன் சேர்ந்து பாராட்டினர். கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் லாகூர் கலந்தர்ஸ் 85 ரன்கள் எடுத்தது.
கடைசி ஐந்து ஓவர்கள்
16வது ஓவரை வீசிய உசாமா மிர் அதில் 14 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஷஹீன் அந்த ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். 17வது ஓவரை இஹ்சானுல்லா வீசினார், அந்த ஓவரில் ஷஹீன் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்ததால் 24 ரன்கள் போனது. 18 ஓவரை வீசிய அப்பாஸ் அப்ரிடி 11 ரன்களை விட்டுக் கொடுத்தார், அன்வர் அலி 19வது ஓவரில் 22 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஷாஹீன் கடைசி ஓவரை ஒரு சிக்சருடன் முடிக்க ரன் 200 ஐ தொட்டது. அதில் லாகூர் கலந்தர்ஸ் அணி 14 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சிலும், ஷஹீன் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை விளாசினார். நடந்த இந்த த்ரில் போட்டியில் லாகூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.