ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. தற்போது இருக்கும் 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகளும் இணைய உள்ளன. இதன்காரணமாக தற்போது இருக்கும் 8 அணிகளுக்கும் 4 வீரர்கள் வரை தக்க வைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. அதன்படி 8 அணிகளும் கடந்த 30ஆம் தேதி தங்களுடைய தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை அறிவித்தனர். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய நான்கு பேரையும் தக்கவைத்தது. அதில் அதிகபட்சமாக ஜடேஜாவிற்கு 16 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தோனிக்கு 12 கோடி ரூபாயும், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு 8 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மொயின் அலிக்கு 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் சென்னை அணியின் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக அந்த அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். அதில்,”சென்னை அணிக்கு தோனி எப்போதும் ஒரு பெரிய சொத்தாக இருந்துள்ளார். அவர்தான் சென்னை அணியின் கேப்டனாக இருந்து வெற்றிகளை தந்துவரை. எனவே எங்களை பொறுத்தவரை அவருடைய அனுபவம் தான் மற்ற வீரர்களுக்கு கை கொடுக்கும். அவர் எந்த அணியை வைத்து விளையாடினாலும் அதன் பெஸ்டை வெளியே கொண்டு வருவார். அவருடைய கேப்டன்ஷிப் திறன் குறித்து யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.






இம்முறை ஐபிஎல் தொடர் சென்னைக்கு திரும்பும் பட்சத்தில் அது நமக்கு நல்லதாக அமையும். ஏனென்றால் சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதும் சென்னை அணிக்கு ஒரு ராசியான மைதானம். மேலும் அங்கு வரும் சென்னை ரசிகர்கள் அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்கள். இந்த முறை மைதானம் முழுவதும் ரசிகர்களுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.


டூபிளசிஸ் சென்னை அணிக்கு ஒரு முக்கியமான வீரர். அவர் இரண்டு முறை சென்னை அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார். ஆகவே அவரை ஏலத்தில் மீண்டும் திரும்பி எடுக்க நாங்கள் முயற்சிப்போம். அவரை திருப்பி எடுப்பது நம் கையில் இல்லை. ஆனாலும் நாங்கள் தீவிரமாக அதற்கு முயற்சி செய்வோம்” எனக் கூறியுள்ளார். 






சென்னை அணியில் இருந்து ரெய்னா, டூபிளசிஸ், பிராவோ உள்ளிட்ட வீரர்கள் வெளியே சென்றதற்கு சென்னை ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். இந்தச் சூழலில் சிஇஓ விஸ்வநாதனின் பேச்சு அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வீரர்கள் ஏலத்தில் சென்னை அணி மீண்டும் இந்த வீரர்கள் திரும்பி எடுக்கும் என்றும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். 


மேலும் படிக்க: 16 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெரிய முடியுடன்.. தோனியும் அன்பு டென் சேப்பாகமும் சந்தித்த நாள்!