ஐ.பி.எல். வரலாறு தொடங்கியது முதலே ரசிகர்களின் அபிமான அணிகளில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ஒன்றாகும். சென்னை அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதற்கு முக்கிய மற்றும் முதன்மை காரணம் தோனியே ஆகும்.


200வது போட்டி:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் சீசன் தொடங்கி தற்போதைய 16வது சீசன் வரை தோனியே கேப்டனாக இருந்து வருகிறார். இதில் 4 முறை சாம்பியன் பட்டத்தையும் தோனி தலைமையில் சி.எஸ்.கே. வென்று அசத்தியுள்ளார்.


இந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றைய போட்டி ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணிக்கு கேப்டனாக தோனி களமிறங்கும் போட்டி ஆகும். இந்தியன் பிரமியர் லீக்கில் சென்னை அணிக்காக தோனி கேப்டனாக களமிறங்கிய 200வது போட்டி ஆகும்.






கவுரவப்படுத்திய சி.எஸ்.கே.:


ஐ.பி.எல். வரலாற்றில் ஒரே அணிக்கு கேப்டனாக 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற வரலாற்று பெருமையை தோனி படைத்துள்ளார். மிக அரிய சாதனையை படைத்துள்ள தோனியை சி.எஸ்.கே. நிர்வாகம் கவுரவித்தது. போட்டி தொடங்கும் முன்பு சி.எஸ்.கே. அணி நிர்வாகத்தினரும், சி.எஸ்.கே. அணியினரும் மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்பு 200வது போட்டியில் ஆடும் தோனிக்கு சிறப்பு பரிசை அளித்தனர். தல 200 என்று எழுதப்பட்டு தோனியின் புகைப்படம் பொறித்த அந்த பரிசை சி.எஸ்.கே. அணியின் உரிமையாளர் சீனிவாசன் தோனிக்கு வழங்கினார்.


தோனி ஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை சென்னை அணி மட்டுமின்றி ஒரு சீசனில் புனே அணிக்கும் கேப்டனாக ஆடியுள்ளார். தோனி மொத்தம் 213 ஐ.பி.எல். போட்டிகளுக்கு கேப்டனாக ஆடி 125 போட்டிகளில் கேப்டனாக வெற்றி பெற்றுள்ளார். 87 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளார். 1 போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. வெற்றி சதவீதம் 58.96 சதவீதம் ஆகும்.


தோனி, ரோகித், விராட்:


தோனிக்கு அடுத்த இடத்தில் மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா 146 போட்டிகளுக்கு கேப்டனாக ஆடி 80 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் விராட்கோலி 140 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 64 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்தபோது இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 41 வயதான தோனி இதுவரை 238 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 5004 ரன்களை விளாசியுள்ளார். அதில் 24 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக தோனி 84 ரன்கள் விளாசியுள்ளார்.


மேலும் படிக்க: CSK vs RR, IPL 2023 Live: 176 ரன்களை சென்னைக்கு இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான்; பந்து வீச்சில் என்ன செய்யப் போகிறது?


மேலும் படிக்க: IPL Man of the Match: இந்த லிஸ்ட்ல ரோகித் சர்மா தான் முதலிடம்; தோனி எல்லாம் அதுக்கு அப்புறம் தான்..!