IPL Man of the Match: ஐபிஎல் போட்டியில் மிகவும் அதிக ரசிகர் படையைக் கொண்ட அணிகள் என்றால் அது, அதிக முறை அதாவது 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ள மும்பை இந்தியன்ஸ், நான்கு கோப்பைகளை வென்றாலும் சூதாட்ட விவகாரத்தில் இரண்டு ஆண்டுகள் தடையில் இருந்து மீண்டு வந்து வீறுநடை போட்டுக் கொண்டு இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஒவ்வொரு ஆண்டும், “ இசால கப் நம்தே” என்ற நம்பிக்கையுடன் வளம் வரக்கூடிய பெங்களூரு அணி. இந்த மூன்று அணிகளுக்குத் தான் நிலையான மற்றும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
இவற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்ட காலம் முதல் தற்போது வரை கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி வருபவர் மகேந்திர சிங் தோனி. இவர் இதுவரை சென்னை அணியை 199 போட்டிகளில் வழிநடத்தில் அவற்றில் 120 போட்டிகளில் வெற்றியை வாகை சூடியுள்ளார். 78 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளார். ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இதில், 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். அதாவது, 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது.
அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அதாவது 22 வயதில் ஒரு அணியை வழிநடத்தியவர் என்றால் அதற்கு விராட் கோலி தான். 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்தியுள்ளார். இவர் மொத்தம் 140 போட்டிகளில் பெங்களூரு அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 64 போட்டிகளில் வெற்றியும் 69 போட்டிகளில் தோல்வியையும் அந்த அணி சந்தித்துள்ளது. 7 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. இவரது தலைமையில் பெங்களுரு அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஆனால் 2016ஆம் ஆண்டு மட்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 2013ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் இடைப்பட்ட காலத்தில் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து ரோகித் சர்மாவுக்கு பொறுப்பு கைமாற்றப்பட்டது. அன்று முதல் இன்றுவரை இவர் தான் மும்பை அணியை வழிநடத்தி வருகிறார். 2013,2015,2017,2019,2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணி கோப்பையை வென்றது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை கோப்பையை வென்ற அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 146 போட்டிகளில் விளையாடி 80 போட்டிகளில் வெற்றியும் 62 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. 4 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில் நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா மேன் - ஆஃப்த மேட்ச் விருதினை வென்றார். இது கேப்டனாக அவர் வாங்கும் 19வது விருது ஆகும். இவருக்கு அடுத்த இடத்தில் 17 விருதுகளுடன் சென்னை அணியின் கேப்டன் தோனி உள்ளார். மூன்றாவது இடத்தில் விராட் கோலி உள்ளார். இவர் 14 போட்டிகளில் கேப்டனாக மேன் - ஆஃப்த மேட்ச் விருதினை வென்றுள்ளார்.