மும்பை அணிக்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றியைப் பெற்றது. மும்பை வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அர்ஷ்தீப் சிங் வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அபாரமாக பந்துவீசி அசர வைத்ததுடன், இரண்டு ஸ்டம்புகளையும் உடைத்து அதகளம் செய்தார். அதுகுறித்து ட்வீட் செய்த பஞ்சாப் அணிக்கு, மும்பை போலீஸ் கூறிய பதில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் அணி 214 ரன்கள்
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் அதிகபட்சமாக 55 ரன்கள் குவித்தார். குறிப்பாக 16வது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 31 ரன்கள் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 1 ரன்னில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, ரோகித் - கேமரூன் க்ரீன் கூட்டணி இணைந்து அதிரடியாக ஆடியது. 9வது ஓவரில் ரோகித் சர்மா கியரை மாற்ற, 10வது ஓவரை வீசிய லிவிங்ஸ்டன் பந்தில் ரோகித் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
நன்றாக ஆடிய மும்பை அணி
இதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் - கேமரூன் க்ரீன் கூட்டணி சேர்து, பஞ்சாப் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என்று இருவரும் அடிக்க, மும்பையின் ஸ்கோர் 15 ஓவர்களில் 149 ரன்களை எட்டியது. இதனிடையே கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ் இருவரும் தனது அரைசதத்தை அடித்து அசத்தினர். சிறப்பாக ஆடிய இருவரும் ஒரு கட்டத்தில் ஆட்டமிழக்க, ஆட்டம் சூடுபிடித்தது. க்ரீன் 67 ரன்களும், சூர்யகுமார் யாதவ், 57 ரன்களும் எடுத்து எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஸ்டம்புகளை நொறுக்கிய அர்ஷ்தீப்
12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை மும்பை அணிக்கு ஏற்பட்டது. களத்தில் டிம் டேவிட் - திலக் வர்மா இணை இருந்தது. இதையடுத்து எல்லிஸ் வீசிய 19வது ஓவரில் 15 ரன்கள் குவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் அற்புதமாக பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் மட்டுமே சென்றது.
2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 3வது பந்தில் திலக் வர்மாவை அர்ஷ்தீப் சிங் போலடாக்க, மிடில் ஸ்டம்ப் உடைந்து சிதறியது. இதனால் கடைசி 3 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் இம்பேக்ட் பிளேயராக நேஹல் வதேரா இறங்கினார், ஆனால் 4வது பந்திலும் அர்ஷ்தீப் சிங் மிடில் ஸ்டம்பை இரண்டாக பிளந்து மாஸ் காட்டினார். அடுத்தடுத்து இரண்டு பந்துகள் மிடில் ஸ்டம்பை உடைத்து அனைவரையும் அசர வைத்தார்.
மும்பை போலீஸ் ரீப்ளே
இதனால், கடைசி 2 பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் ஆட்டத்தை பஞ்சாப் வென்றது. நெருப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, 12 லட்சம் மதிப்புள்ள இரண்டு ஸ்டம்புகளையும் உடைத்து மிரட்டினார். இரண்டு ஸ்டம்பை உடைத்த அவர் பற்றி சமூக வலைதளத்தில் பேச்சுக்கள் எழ, பஞ்சாப் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம், மும்பை போலீசை டேக் செய்து 'நாங்கள் குற்றத்தை பதிவு செய்ய விரும்புகிறோம்', என்று கூறி ஸ்டம்ப் உடைந்த படத்தை பகிர்ந்தது. அதற்கு பதிலளித்த மும்பை போலீஸ், "சட்டத்தை உடைப்பவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும், ஸ்டம்பை அல்ல" என்று கூறியிருந்தது. இந்த டீவீட்டை பலர் லைக் செய்திருந்தனர்.