இன்றைய ஐபிஎல் 2023 சீசனில் நடக்க இருக்கும் ஆர்சிபி போட்டியில் அணிகள் நன்றாக விளையாடுகிறதோ இல்லையோ, ஏகப்பட்ட ஜிங்க்ஸ்கள் விளையாட உள்ளன. 263 என்ற அதிகபட்ச ரன்னையும், 49 என்ற குறைந்தபட்ச ரன்னையும் ஆர்சிபி அடித்தது இதே தேதியில்தான், ஏப்ரல் 23.


இந்த ஐபிஎல்-இல் ஆர்சிபி 


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாட உள்ள அவர்கள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு சந்திக்கின்றனர். இந்த தொடரில் நன்றாகவே ஆடி வரும் ஆர்சிபி அணிக்கு அவ்வபோது கடைசி ஓவர்களில் திடீர் ட்விஸ்ட் கொடுக்கப்பட்டு தோல்விக்கு செல்கிறது. ஆனால் அவற்றை கடந்து எப்படியோ மூன்று போட்டிகளில் வென்றுள்ளார். அதே போல மூன்று போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளனர்.


தற்போது ஆறாவது இடத்தில் இருக்கும் அவர்கள், இந்த போட்டியை வென்றால் ஐந்தாவது இடத்திற்கு வர முடியும். அதற்காக அந்த அணி இன்று கடுமையாக போராடும் என்று தெரிகிறது. ஐபிஎல் கிட்டத்தட்ட மைய கட்டத்தை அடைய உள்ள நிலையில், இந்த வெற்றி அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஆனால் அவர்களை அதனை செய்ய விடாமல் தடுக்க பல விஷயங்கள் காத்திருக்கின்றன. 



பச்சை ஜெர்சி


ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடும். அதே போல இந்த வருடம் இந்த போட்டியில்தான் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியில் ஆட உள்ளது. பசுமையை முன்னிறுத்தும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருதி இந்த செயலை அவர்கள் செய்வது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த ஜெர்சியை அணிந்து 11 முறை ஆர்சிபி அணி ஆடியிருக்கிறது. அதில் வெறும் இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 8 முறை தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. இதனால் ஆர்சிபி இந்த ஜிங்க்ஸை மாற்ற முயற்சிக்கும் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்: Arshdeep Singh: ரெண்டே பால், ரூ.24 லட்சம் காலி..! ஸ்டம்புகளை உடைத்தெறிந்து அர்ஷ்தீப் சிங் மிரட்டல்


ஏப்ரல் 23


ஜிங்க்ஸில் மற்றொன்று இந்த தேதி. ஏப்ரல் 23 என்பது ஆர்சிபி அணியால் மறக்க முடியாத தேதி. இந்த தேதி அவர்களுக்கு வாழ்கைக்குமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இதே தேதியில் 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோரான 263-ஐ குவித்து சாதனை படைத்தது. இதே தேதியில் 2017 ஆம் ஆண்டு, 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, ஐபிஎல் வரலாற்றிலேயே குறைந்த ஸ்கோர் என்ற பெயரை பெற்றது. இதுவரை அந்த ரெகார்டுகள் முறியடிக்கப்படவில்லை. இன்று அதே நாளில் நடக்கும் போட்டியில் இதே போல வித்தியாசமாக ஏதாவது நடக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 



சின்னசாமி ஸ்டேடியம்


முக்கியமாக இதில் 263 ரன் அடித்த போட்டி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியாகும். அதிலும் குறிப்பாக பகல்-இரவு போட்டியாக நடந்த போட்டியாகும். அப்போது பகல் இரவு போட்டிகள் 4 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல்-லும் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டிகள் 200 ரன்னை தாண்டி விடுவதால் ஆர்சிபி ரசிகர்கள் கொஞ்சம் மகிழலாம். ஆனால் இந்த தொடரில் ஆர்சிபி அணியின் ஹோம் மேட்ச் தோல்விகள் தொடர்ந்து வருவது கொஞ்சம் வருத்தத்தை அளிக்கலாம். 49 ரன் சாதனை நிகழ்த்தப்பட்டது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ்-இல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல கணக்குகள் இருப்பதால், இன்றைய போட்டியில் ஸ்வாரஸ்யத்திற்கு குறை இருக்காது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.