ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்த பந்துகளில், ஸ்டம்புகளை உடைத்தெறிந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


மிரட்டிய அர்ஷ்தீப் சிங்:


ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, மூன்றாவது பந்தில் திலக் வர்மா கிளீன் போல்டானார்.


அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த துல்லியமான யார்க்கரின் மிடில் ஸ்டம்பானது இரண்டு துண்டுகளாக உடைந்தது. இதையடுத்து களமிறங்கிய நேஹல் வதேராவும், முதல் பந்திலேயே கிளீன் போல்டானார். அதுவும், திலக் வர்மாவிற்கு வீசப்பட்டது போன்ற துல்லியமான யார்க்கரில் இரண்டாவது முறையாகவும் ஸ்டம்ப் உடைந்தது. அர்ஷ்தீப் சிங்கின் இந்த அபார ஆட்டத்தால் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






ரூ.60 லட்சம் காலி:


ஐபிஎல் தொடர் சர்வதேச தரத்தில் நடத்தப்படும் சூழலில், நடுவரின் எந்த ஒரு சிறிய முடிவும் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உயர்தொழில்நுட்ப சாதனங்கள் மட்டுமே இந்த போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் மைக் மற்றும் கேமரா வசதி அடங்கிய, எல்.ஈ.டி ஸ்டம்புகள் தான் பயன்படுத்தபடுகின்றன. ஒரு செட் ஸ்டம்ப்க்ளின் விலை 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.30 லட்சம் ஆகும். அதன்படி, நேற்று அர்ஷ்தீப் சிங் வீசிய வெறும் இரண்டே பந்துகளால் இந்திய கிரிக்கெட் சம்மேளனத்திற்கு ரூ.60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. துல்லியமாக கூற வேண்டுமென்றால் உடைந்த 2 ஸ்டம்புகளின் மதிப்ப மட்டும் ரூபாய் 24 லட்சம் ஆகும்.


ஐபிஎல் தொடரில் அர்ஷ்தீப் சிங்:


கடந்த 2018ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்த அர்ஷ்தீப் சிங்,  2019ம் ஆண்டு பஞ்சாப் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டர். இதுவரை 44 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 53 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஒரு போட்டியில் 32 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது தான் அவரது சிறந்த பந்துவீச்சாகும். தொடக்கத்தில் வெறும் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அர்ஷ்தீப் சிங்கின் ஊதியம், தற்போது ஒரு சீசனுக்கு ரூ.4 கோடியாக உயர்ந்துள்ளது. மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட அவருக்கு, தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.


விமர்சனங்களை தகர்த்த அர்ஷ்தீப் சிங்:


ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அர்ஷ்தீப் சிங் இந்திய அணியிலும், கடந்த 2022ம் ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து, கடந்தாண்டு துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முக்கியமான கேட்ச் ஒன்றை அர்ஷ்தீப் சிங் நழுவவிட்டார். இதனால் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதால், அர்ஷ்தீப் சிங் மீது கடுமையான மற்றும் மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன். இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் பதலளிக்கும் விதமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அர்ஷ்தீப் சிங், இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.