கிரிக்கெட் விளையாட்டில் பொதுவாக இடது கை ஆட்டக்காரர்கள் என்றால் ஒரு தனி ஸ்டைல் உண்டு. அவர்களுக்கு என்று ஒரு எலிகன்ஸ் மற்றும் ஒரு சிறப்பான பேட்டிங் ஸ்டைல் இருக்கும். அது பார்ப்பவர்கள் பலருக்கு ஒரு விதமான ஆனந்தத்தை தரும். அந்தவகையில் ஆடவர் கிரிக்கெட்டில் பல இடது கை ஆட்டக்காரர்கள் உள்ளனர். மகளிர் கிரிக்கெட்டிலும் அப்படி சில இடது கை பேட்டிங் செய்யும் வீராங்கனைகள் இருக்கின்றனர். இந்தியாவில் அஞ்சும் சோப்ராவிற்கு பிறகு ஒரு நல்ல இடது கை ஸ்டைலிஷ் வீராங்கனை என்றால் அது ஸ்மிருதி மந்தானா தான். இவர் இன்று தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்து வந்த பாதை என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1996ஆம் ஆண்டு பிறந்தவர் ஸ்மிருதி மந்தானா. இவர் சிறு வயதில் தன்னுடைய சகோதரர்களுடன் வீட்டில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். 9வயதாக இருந்தப் போது இவர் தன் சகோதரர் உடன் விளையாட்டாக ஒருநாள் கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மற்றவர்கள் விளையாடுவதை பார்த்தவுடன் இவருக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அன்று முதல் விளையாட்டாக கிரிக்கெட் பயிற்சியை தொடங்கினார். பின்னர் 11 வயதில் மகாராஷ்டிரா யு-19 மகளிர் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதன்பின்னர் 2013ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தானா முதல் முறையாக களமிறங்கினார்.
அதற்கு அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்மிருதி மந்தானா டெஸ்ட்டில் அறிமுகமானார். அந்த அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் கடந்து அசத்தினார். இந்தியா அப்போட்டியை வெல்ல இவருடைய அரைசதமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 72 பந்துகளில் 90 ரன்கள் விளாசி இந்திய வெற்றிக்கு மீண்டும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்.
ஒருநாள், டெஸ்ட் போல் டி20 போட்டிகளிலும் இவருடைய அதிரடி தொடக்கம் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் விளாசி 55 ரன்கள் எடுத்தார். மேலும் அதே போட்டியில் டி20 வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
சர்வதேச கிரிக்கெட் தவிர கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தானா பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சூப்பர் லீக் போட்டியில் லான்சர் தண்டர் அணிக்காக விளையாடிய ஸ்மிருதி மந்தானா 61 பந்துகளில் 102 ரன்கள் விளாசி தன்னுடைய முதல் டி20 சதத்தை பதிவு செய்தார். இது தவிர ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் பிக்பாஷ் லீக் ஆகியவற்றிலும் மந்தானா பங்கேற்று உள்ளார். இதுவரை ஸ்மிருதி மந்தானா இந்தியாவிற்காக 81 டி20 போட்டிகள், 59 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். இவற்றில் ஒருநாள் கிரிக்கெட்டில் 2253 ரன்களும், டி20 போட்டிகளில் 1901 ரன்களும் அடித்துள்ளார்.
மேலும் படிக்க: வந்தாச்சு அப்டேட்.. இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள இலங்கை அணி அறிவிப்பு..!