சினிமாக்கள் எல்லாம் வெறும் சினிமாக்கள் அல்ல. அவை நம் மனதின் அடியாழத்தில் புதைந்து கிடக்கும் உணர்வுகளை கிளர்ந்தெழ செய்யும், கிளர்ந்தெழவே முடியாதபடி செங்கல்லையும் சிமெண்டையும் போட்டு சாமதியாக்கிவிடவும் செய்யும் ஓர் அற்புத சாதனம்.  ஒரு சினிமாவால் உங்களை அழ வைக்க, ஆனந்தமாக்க, ஆஸ்வாசப்படுத்த, ஆவேசப்படுத்த முடிகிறதென்றால் அது எவ்வளவு பெரிய ஆயுதமாக இருக்க வேண்டும் ?  அழிக்க முடியா வரலாறுகளை, மக்கள் மனதில் செதுக்கிவிட்டல்லவா இந்த சினிமா போய்விடுகிறது.


அப்படிப்பட்ட அற்புத படைப்புகளில் ஒன்றுதான் "Invictus" திரைப்படம். ’நெல்சன் மண்டேலாவை’ பற்றி தெரியாதவர்கள் கூட இந்த படத்தை பார்த்த பிறகு நெக்குருகிபோகும் அளவுக்கு அவரை நேசிக்கத் துவங்கி விடுவார்கள்.


தமிழ்நாடு முதலமைச்சரின் தனிச்செயலர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் எழுதிய "மாபெரும் சபைதனில்" என்ற அனுபவ கட்டுரையில் இந்த படத்தை பற்றி குறிப்பிட்டிருப்பார். அதை படித்த அடுத்த நொடியே அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற பேராவல் தொற்றிக்கொள்ளும். அப்படி பார்த்து சிலிர்த்த அந்த படத்தின் கதை இதுதான். 




தன் இன மக்களின் உரிமைகளுக்காக போராடி 27 ஆண்டுகள் ராபின் தீவில் தனிமை சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா உலக நாடுகளின் அழுத்தத்தால் விடுவிக்கப்படுகிறார். அவர் விடுவிக்கப்பட்டு காரில் அழைத்துச் செல்லப்படும் ஒரு பகுதியில் வெள்ளையின இளைஞர்கள், தேர்ந்த பயிற்சியாளர்களின் மேற்பார்வையில் "ரக்பி" விளையாடிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு அருகிலேயே துளியும் தொடர்பில்லாமல் அழுக்கு சட்டைகளை கொண்ட கருப்பின சிறுவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அதே ரக்பியை விளையாடி கொண்டிருக்கிறார்கள். நெல்சன் மண்டேலா இவர்களை கடக்கும்போது கறுப்பின சிறுவர்கள் ஒரே ஓட்டமாய் ஓடிபோய் "மண்டிபா" "மண்டிபா" என உற்சாக முழக்கமிடுகின்றனர்.


 


இதனை வெறுப்புடன் பார்க்கும் வெள்ளையின இளைஞர்கள் யார் இவர் என கேட்கிறார்கள், அதற்கு அந்த பயிற்சியாளர் மண்டேலாவை அவன் ஓர் தீவிரவாதி என்கிறார். கால சக்கரம் சுழல்கிறது. நிறவெறி ஒழிப்பிற்கு பிறகு, பெரும் சவால்களுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை சந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா.  இரண்டு கோடிக்கும் மேலானோர் வாக்களித்த அந்த தேர்தலில் வெற்றிவாகை சூடி தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கிறார் மண்டேலா. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த திறந்த வெளியில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவராக நிகழ்த்தும் தனது முதல் உரையை நிகழ்த்துகிறார் மண்டேலா. அதில் ‘இந்த அழகான நாட்டில் இனி ஒருபோதும் ஒருவரை ஒருவர் வெறுக்கவோ, தாழ்த்தி பேசவோ இடமளிக்கப்பட மாட்டாது’ என கூறி அனைவரையும் ஒருமித்து நாட்டை வழிநடத்த இருப்பதாக அறிவிக்கிறார். அடுத்த நாள் அதிகாலை நடைபயிற்சிக்காக வெளியில்வரும் மண்டேலா, கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நாளிதழ்களில் தலைப்புச் செய்தியை பார்க்கிறார். அதில், தேர்தலில் வென்றுவிட்டார் ஆனால் நாட்டை வெற்றிகரமாக வழிநடத்துவாரா ? என எழுதியிருக்கிறது. அதை பார்த்த மண்டேலா "Its a legitimate question " என கூறி கடந்து செல்கிறார்.




குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு அவர் செல்லும் முதல் நாள் அன்று அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களில் பெரும்பான்மையானோருக்கு சலிப்பு ஏற்படுகிறது. அவர்களில் சிலர் தங்களது பணியை உதறி தள்ளிவிட்டு புறப்பட தயாராகின்றனர். இதையெல்லாம் கவனித்தவாறு தனது இருக்கையில் சென்று அமருகிறார் மண்டேலா. தனது பெண் உதவியாளரை அழைத்து அலுவலகத்தை வேலை பார்க்கும் அனைவரிடம் நான் பேசவேண்டும் உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள் என சொல்கிறார். சிறிது நேரத்தில் அனைவரும் கூடிவிட, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வணக்கம் சொல்லிவிட்டு பேச ஆரம்பிக்கிறார். இங்கு முன்னர் நீங்கள் எப்படி இருந்தீர்களோ அப்படியே இருக்கலாம், எனக்கு இந்த நாட்டை மக்களை வழிநடத்த உங்களது ஒத்துழைப்பு தேவை என உருகித் தள்ளுகிறார். அவரது பேச்சில் கவர்ந்திழுக்கப்பட்ட ஊழியர்களின் முகங்களில் மகிழ்ச்சி பரவத் தொடங்குகிறது. மண்டேலாவின் மெய் காவலர்களுக்கு இன்னும் கொஞ்சம் பேர் தேவைப்படும் பொழுது வெள்ளையின அதிகாரிகளை தனது பாதுகாவலர்களாக நியமிக்கிறார். இதில் அதிருப்தி அடையும் கருப்பின அதிகாரி மண்டேலாவிடம் கோவமாக சென்று அவர்களை எப்படி நம்புவது என கேட்கிறார். அதற்கு மண்டேலா ’இந்த தென்னாப்பிரிக்காவின் ஒட்டுமொத்த மக்களுக்கும்தான் நான் குடியரசுத் தலைவர் வெறும் கருப்பினத்தவர்களுக்கு மட்டுமே ஆன தலைவராக நான் இருக்க விரும்பவில்லை’  என்கிறார். வேறு வழியின்றி தனது அறைக்கு திரும்பும் கருப்பின அதிகாரி, மண்டேலாவின் நாள் திட்டத்தை வெள்ளையின அதிகாரிகளிடம் வேண்டா வெறுப்பாக பகிர்ந்து கொள்கிறார். மண்டேலாவின் நாள் திட்டத்தின்படி ரக்பி போட்டியை காண செல்கிறார் – அங்கு தென்னாப்பிரிக்க அணி மிக மோசமான தோல்வியை தழுவிகிறது.


அதைவிட அங்கு மோசமாக இருந்தது வெள்ளையரின ரசிகர்கள் தென்னாப்பிரிக்காவின் "Springbok" அணியையும், கருப்பர் இன ரசிகர்கள் இங்கிலாந்து அணியையும் ஆதரித்து இருபிரிவாக பிரிந்து குரலெழுப்பிக்கொண்டிருந்ததுதான். தென்னாப்பிரிக்கவின் வெள்ளையரின அணி வீரர்களை யார் எதிர்த்து ஆடினாலும் அவர்களை ஆதரிப்பதுதான் கருப்பர் இன மக்களின் வழக்கம். இதை கண்டு வேதனை அடைகிறார் மண்டேலா ; அனைவரையும் ஒற்றுமைப்படுத்த ’ரக்பி’ விளையாட்டை கையிலெடுக்க முடிவெடுக்கிறார்.தென்னாப்பிரிக்க அணி அடைந்த மோசமான தோல்வியை அடுத்து, அணியில் சில மாற்றங்களை செய்ய முடிவெடுக்கின்றார்கள். முதலில் அணியின் டீ சர்ட் நிறத்தையும் லோகோவையும் மாற்ற ஒருமித்து முடிவெடுக்கப்படுகிறது.  இந்த செய்தி அயல்நாட்டு வர்த்தக குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் மண்டேலாவிற்கு எட்டுகிறது. உடனடியாக அவர் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விரைகிறார். கருப்பர் இனத்தவர்களின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோருகிறார். வெள்ளையர்களிடமிருந்து ரக்பி விளையாட்டை பிரித்தால், அவர்களை நாம் இழக்கத் துணிந்துவிட்டோம் என்று பொருள். பழிவாங்கபடுவதை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நாம் திகைப்பை ஏற்படுத்த வேண்டும். எப்படி என்றால் "மன்னிப்பு, பெருந்தன்மை" என்ற ஆயுதங்களை ஏந்துவதின் மூலம் அதனை நாம் செய்துகாட்ட முடியும். அதற்கு என்னை அனுமதியுங்கள் என கேட்பார் மண்டேலா.


 


தங்கள் தலைவரின் கோரிக்கையை கட்டளையாக ஏற்று அதற்கு இணக்குகிறது கூட்டம். உலகக்கோப்பை போட்டியை நடத்த தயாராகிறார்கள். ஆனால் வீரர்களோ உற்சாகமிழந்து, அவநம்பிக்கையை சுமந்து நிற்கிறார்கள். இந்த நிலையில், Springbok அணியின் கேப்டன் பிராங்க் பியானருக்கு குடியரசுத் தலைவருடன் தேநீர் அருந்த அழைப்பு வருகிறது. குழப்பத்துடன் அங்கு செல்லும் கேப்டனை அன்புடன் வரவேற்று உபசரிக்கிறார் மண்டேலா, சில நாட்களுக்கு முன்னர் உங்களது கணுக்காலில் அடிப்பட்டதாக சொன்னார்கள் இப்போது எப்படி இருக்கிறது என்று மண்டேலா கேட்டதும் விக்கித்து நிற்கிறார் பிராங்க். அவருக்கு தானே தேநீர் தயாரித்து தரும் மண்டேலா, தனது சிறை வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொள்கிறார்.


அப்போது, வில்லியம் ஹென்லி எழுதிய "Invictus" என்ற தலைப்பிலான கவிதையை அவரது உதடுகள் உச்சரிக்கின்றன. " I am the master of my fate ; I am the captain of my soul " என முடியும் அந்த பாடலுக்கு பிறகு இருவருக்குமிடையே அமைதி தவழ்கிறது. இருவருக்குமிடையே இனம்புரியாத ஓர் உந்துதல் ஏற்படுகிறது. பின்னர் தன்னம்பிக்கை, நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முற்படும்போது எழும் தடைகள் பற்றி பேசிவிட்டு கேப்டனை வழியனுப்புவார் மண்டேலா. வெளியே காத்திருக்கும் தோழி மண்டேலா என்ன சொன்னார் என கேட்பார், சிறிது நேர அமைதிக்கு பிறகு ’இவர் போன்ற ஓர் மனிதரை தன் வாழ்நாளில் இதுவரை சந்தித்ததும் இல்லை இனி சந்திக்கப்போவதுமில்லை’ என்று சொல்லிவிட்டு, ரக்பி உலகக்கோப்பையை வென்று அதனை மண்டேலாவிற்கு சமர்பிக்க வேண்டும் என்று சொல்லிக் கிளம்புவார் பிராங்க்.


மண்டேலா தன் வீரர்கள் ரக்பியில் வெல்ல வேண்டும், அதற்கு என்ன செய்வது என தீவிரமாக ஆலோசிப்பார். பின்னர் புதுமையான திட்டம் ஒன்றை முன்மொழிந்து தனது வீரர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விதிகளில் விளையாடும் குழந்தைகளோடும் இளைஞர்களோடும் விளையாட வேண்டும் என கட்டளையிடுவார். முதலில் வீரர்கள் செல்லும் ஊரில் விளையாடும் குழந்தைகள் ரக்பி அணியில் இருக்கும் ஒரே ஒரு கருப்பர் இன வீரரான செஸ்டரை முய்த்துக்கொண்டு முத்தமிடுவர். பின்னர் மெல்ல, மெல்ல ஒட்டுமொத்த அணியிடனும் பேதமின்றி இணைவர்.


உலகக்கோப்பை தொடங்குகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் ஸ்பெரிங்பக் அணி கடுமையாக விளையாடி வெற்றி பெறுகிறது. பிறகு அடுத்தப்போட்டிக்கான பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருக்கும்போது ஹெலிகாப்படரில் வந்து இறங்குகிறார் மண்டேலா.  அவரை வரவேற்கும் கேப்டன், வீரர்கள் பெயரை சொல்லி அறிமுகப்படுத்த முயல, அவரை தடுத்து எனக்கு தெரியுமே என ஒவ்வொரு வீரரின் பெயரையும் சொல்லி அழைத்து, கைக் கொடுத்து ’ஆல் தி பெஸ்ட் மை சைல்ட்’ என பொங்க வைப்பார் மண்டேலா.  கிளம்பும்போது பிராங்கை வாக் வித் மீ என சொல்லி அழைக்கும் மண்டேலா, தன் கைப்பட எழுதிய "Invictus" கவிதையை கேப்டபது கையில் அளிப்பார்.


அரையிறுதியில், பிரெஞ்சு அணியை வென்று கொண்டாட்டத்தில் இருக்கும் அணிக்கு காலை 6 மணிக்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும் என மண்டேலாவிடம் இருந்து செய்தி வருகிறது. ஏதோ புதுவித பயிற்சியை தரப்போகிறார் என வீரர்கள் நினைத்திருக்க, கப்பலில் அவர்களை ஏற்றி தான் 27 வருடங்கள் இருந்த ராபின் சிறைக்கு அத்தனை பேரையும் அழைத்துச் செல்வார். சிறையின் உள்ளே நுழைந்ததும் மண்டேலா சிறை எது ? என கேட்டு உள்ளே நுழையும் பிராங் பியானர் அந்த சிறையை அறையை கைகளை நீட்டி அளந்து பார்கிறார். பின்னர், மண்டேலாவின் ஸ்பரிசங்கள் அந்த சிறையெங்கும் உறைந்து கிடக்கிறது. அத்தனை வீரர்களும் அமைதியில் உறைந்து நிற்கிறார்கள் ; இறுதிப்போட்டியில் வெல்ல வேண்டும் என்ற வேட்கை வெறியாக அவர்களது மனதை பற்றிக்கொள்கிறது.


இறுதிபோட்டி... களத்தில் நிற்கும் இரு அணி வீரர்களுக்கும் வாழ்த்துச் சொல்ல ஆடுகளத்திற்கு வரும் மண்டேலா "Springbok" அணியின் 6ஆம் எண் பொறித்த டீ சர்ட்டை அணிந்து கொண்டு உற்சாகமாக கைகொடுக்கிறார். அப்போது, நியூசிலாந்து அணியின் 120 கிலோ எடை கொண்ட வீரரிடம் கைக் கொடுத்து வாழ்த்து சொல்லும் மண்டேலா உங்களது ஆட்டத்தை பார்க்கும்போது எனக்கே சிறிது அச்சம் ஏற்படுகிறது என புன்னகையுடன் சொல்லிச் செல்கிறார்.  ஆட்டம் துவங்குகிறது...நியூசிலாந்து அணியினர் படு ஆக்ரோஷமாக அவர்களது பழங்குடியினர் நடனத்தை ஆடி அரங்கை அதிர வைக்கிறார்கள். தென்னாப்பிர்க்க வீரர்களிக்கே சற்று மிரட்சி ஏற்படுகிறது. அப்போது மைதானத்தை நோக்கி ஜெட் விமானம் ஒன்று தாழ பறந்து வருகிறது. ஏதோ தாக்குதல் நடக்க போகிறது என பாதுகாப்பு அதிகாரிகள் கணித்து உஷாராகும் முன்பு மைதானத்தின் அருகே வந்துவிடுகிறது. வீரர்களும் ரசிகர்களும் மிரண்டுபோய் அண்ணாந்து பார்க்கிறார்கள். விமானத்தின் அடிபாகத்தில் " Good Luck Springbok" என்ற எழுத்துகள் விரிகிறது.


ஆம் மண்டேலாவின் ஏற்பாடுதான் இதை கண்டதும் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு உற்சாகம் தீயென பற்றிக்கொள்கிறது. அரங்கம் அதிர கரவொலி எழுகிறது. போட்டி மிகக்கடுமையாக இருக்கிறது ; இரு அணியினரும் வெறித்தனமாக பேயாட்டம் ஆடுகிறார்கள். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 9 - 9 என்ற சம எண்ணிக்கையிலான புள்ளிகளை பெறுகின்றன.  கூடுதல் நேரம் தரப்படுகிறது. வெற்றிப்பெற்றே ஆகவேண்டும் என்ற வெறி உந்தித்தள்ள முட்டிமோதி, கட்டிப்பிரண்டு 15க்கு 12 என்ற புள்ளிகளை பெற்று வெற்றி வாகை சூடுகிறது தென்னாப்பிக்க அணி.கருப்பர், வெள்ளையர் என்ற வேறுபாடுகளை மறந்து ஒருவரையொருவர் கட்டித் தழுவி, முத்தமிட்டு கைக்கொடுத்து தங்கள் நாட்டு அணியின் வெற்றியை கொண்டாடித்தீர்க்கின்றனர். நாடே உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது ; மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. அரங்கத்தில் இருந்து எழும் மண்டேலா வெற்றி கூத்தாடுகிறார்.


மண்டேலாவின் கைகளில் இருந்து உலக்கோப்பையை பெறும் கேப்டன் பிராங் உணர்ச்சி கொந்தளிப்பில் மண்டேலா கைகளை பற்றுகிறார். நாட்டுக்காக நீங்கள் வெற்றி பெற உழைத்தமைக்கு நன்றி என மண்டேலா சொல்ல ; இல்லை பிரசிடெண்ட் நீங்கள் நாட்டுக்காக செய்தமைக்காகதான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் என பிராங் சொல்ல அதனை பார்க்கும் நம் கண்கள் கலங்குகிறது. விளையாட்டால் வேற்றுமைகளை மறக்கடித்து ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதையும், பணியாளர் முதல் பணக்காரர் வரை அனைவரையும் சமமாக மதிப்பவராக மண்டேலா இருந்ததையும் ஆணித் தரமாக ஆழ சொல்லியிருப்பார் இயக்குநர் கிளிண்ட்.


மண்டேலா மனித குலத்தின் மாபெரும் பொக்கிஷம் !