நீச்சல் விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளரந்து வருபவர் ஶ்ரீஹரி நட்ராஜ். இவர் நேற்று நடைபெற்ற செட்டி கோலி டிராபி நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பேக்ஸ்டோர்க் பிரிவில் 53.77 விநாடிகளில் நீந்தி அசத்தினார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற இருந்த ஏ பிரிவு நேரமான 53.85 விநாடிகளுக்கு முன்பாக நீந்தி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார். 20 வயது இளைஞர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில் ஶ்ரீஹரி நட்ராஜூக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு மிகப்பெரிய பந்தம் உண்டு. அது என்ன? யார் இந்த ஶ்ரீஹரி நடராஜ்?
நீச்சல் ஆர்வம்:
2001ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி ஶ்ரீஹரி நட்ராஜ் பெங்களூருவில் பிறந்தார். இவர் பெங்களூருவில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டவர் என்று கூற ஒரு பந்தம் உள்ளது. அதாவது இவரின் தாய் கல்யாணி தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு ஜூனியர் பிரிவு கைப்பந்து வீராங்கனையாக இருந்து வந்துள்ளார். எனினும் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.
தன் தாயைப் போல ஸ்ரீஹரி நட்ராஜும் சிறுவயது முதல் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார். ஆனால், இவர் தேர்ந்தெடுத்த விளையாட்டு கைப்பந்து அல்ல. நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடும் விளையாட்டைத் தேர்வு செய்தார். தனது 5 வயது முதல் ஆர்வத்துடன் நீச்சல் பயிற்சியைத் தொடங்கினார். இவருடைய பயிற்சியாளரின் அறிவுரைக்கு ஏற்ப நீச்சல் குளத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். நீச்சல் மீது இவருக்கு இருந்த ஆர்வம் அதிகரிக்க விரைவாக நல்ல முன்னேற்றம் கண்டார்.
Serena Skip Tokyo Olympics: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்வில்லை - செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு
தேசிய சாம்பியன் மற்றும் சாதனைகள்:
தன்னுடைய 16ஆவது வயதில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டியில் 50, 100, 200 மீட்டர் பேக்ஸ்டோர்க் பிரிவில் இவர் தங்கம் வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு யூத் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். அந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்தார். அத்துடன் யூத் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் ஸ்ரீஹரி நட்ராஜ் பங்கேற்றார்.
2019-ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இவர் பங்கேற்றார். அந்தப் போட்டியின்போது 100 மீட்டர் பேக்ஸ்டோர்க் நீச்சல் பிரிவில் தேசிய சாதனை படைத்தார். இதில் பந்தய தூரத்தை 54.69 விநாடிகளில் நீந்திக் கடந்து சாதனைப் படைத்தார். மேலும், இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பி பிரிவு தகுதியை இவர் பெற்றார். எனினும் ஏ பிரிவு தகுதியை பெற்றால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்பதால் தீவிரமாக உழைத்துள்ளார்.
ஒலிம்பிக் கனவு:
இதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டு முழுவதும் ஊரடங்கு காலத்திலும் மனம் தளராமல் பயிற்சி எடுத்து கொண்டார். அதன் விளைவாக தற்போது தனக்கு இருந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி ஒலிம்பிக் போட்டிக்கான ஏ பிரிவு தகுதி நேரத்தில் நீந்தி தகுதி பெற்று அசத்தியுள்ளார். நீச்சல் விளையாட்டில் இவர் ரோல்மாடலாக கருதுவது ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற மைக்கேல் பெல்ப்ஸ். அவரைப் போல இவரும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்று பதக்கங்களை வென்று சாதிக்க வேண்டும் என்று கூறி வந்துள்ளார். அந்தக் கனவை தன்னுடைய 20-ஆவது வயதிலேயே நிறைவேற்று வாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் தகுதி பெற்றுள்ளார். அதை தொடர்ந்து தற்போது 100 பேக்ஸ்டோர்க் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டிகளுக்கு இரண்டு இந்திய நீச்சல் வீரர்கள் தகுதி பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இந்த இருவரும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தருவார்கள் என்று அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாட்டு வீரர்கள் - விவரம்!