டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.


2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று இன்று அறிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக் பட்டியலில் தான் இல்லை என்று அவர் இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.  39 வயதான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்காவுக்காக 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அவர் லண்டன் 2012 ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 






ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கபோவதில்லை என்ற முடிவை எடுக்க நிறைய காரணங்கள் உள்ளதாகவும் கூறிய, இந்த முடிவை எடுத்ததற்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் என்றும் கூறினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


செரீனா வில்லியம்ஸ் தற்போது விம்பிள்டன் போட்டிக்கு தயாராகி வருகிறார்.இந்தத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருக்கிறார். 


 






அதிக எண்ணிக்கையிலான கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையை செரீனா வைத்திருக்கிறார். ரோஜர் பெடரர், ரஃபேல் நடாலை விடவும் அதிகம். இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வரலாற்றில் அதிக பட்டம் வென்றவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மார்கரெட் சாதனையை சமன் செய்து விடுவார்.  விம்பிள்டனில், செரீனா வில்லியம்ஸ் வரும் 29ஆம் தேதி முதல் சுற்றில் பெலாரஸைச் சேர்ந்த அலியாக்சந்திர சாஸ்னோவிச்சை எதிர்கொள்கிறார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் காலியிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


செரீனா வில்லியம்ஸ் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய முதல் நபர் அல்ல. டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்தவர்கள் வீரர்கள் ரஃபேல் நடால் மற்றும் டொமினிக் தீம்.


Tokyo Olympics 2021: ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாட்டு வீரர்கள் - விவரம்!