2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.


102 வீரர் வீராங்கனைகள்


இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரை 14 விளையாட்டுகளைச் சேர்ந்த 102 வீரர் வீராங்கனைகள் இதுவரை ஒலிம்பிக் 2021 தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.


3 கோடி ரூபாய் பரிசு






இன்று, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தடுப்பூசி மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழ்நாடு வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளி வெல்லும் வீரர்களுக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் வழங்கப்படும்” என அறிவித்துள்ளார். 4 வீரர்கள், 5 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 9 வீரர் வீராங்கனைகள் தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.


2021 ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு வீரர் வீராங்கனைகள்


1. பவானி தேவி (வாள் வீச்சு)



ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியாவில் இருந்து முதல் முறையாக வாள்வீச்சு போட்டிக்கு தேர்ச்சி முதல் வீராங்கனையானார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி. அதுமட்டுமின்றி, சர்வதேச வாள்வீச்சு போட்டியிலும் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் இவரைச் சேரும்.


8 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அவர், 2016 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இப்போது 2021 ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் அவர், இம்முறை பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2. நேத்ரா குமணன் (பாய்மரப்படகு)



சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன், சர்வதேச பாய்மரப்படகு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர். ஒலிம்பிக் தொடருக்கு இதுவரை பாய்மரப்படகு போட்டிக்கு மற்ற இந்திய வீரர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அதே போட்டிக்கு தகுதி பெறும் முதல் இந்திய வீராங்கனை இவரே!


3. கே.சி கணபதி (பாய்மரப்படகு)



சென்னையைச் சேர்ந்த மற்றொரு வீரரான கே.சி கணபதி, பாய்மரப்படகு போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். 2018 ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற இவர், ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ளார்.


4. வருண் தக்கர் (பாய்மரப்படகு)



பாய்மரப்படகு போட்டியில், 49er பிரிவில் பங்கேற்க இருக்கும் வருண் தக்கர் சென்னையைச் சேர்ந்தவர். இவரும், இதே போட்டியில் பங்கேற்க இருக்கும் கே.சி கணபதியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டவர்கள். ஆனால், டோக்கியோ தொடரில் இருவரும் சேர்ந்து அணியாக விளையாட உள்ளனர்.


5. இளவேனில் வாலறிவன் (துப்பாக்கிச் சுடுதல்)



ஒலிம்பிக் தொடர் வரலாற்றில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி பதக்கங்களை வென்றுள்ளது. அந்த வரிசையில், கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். கடலூரைச் சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது அவர் குஜராத்தில் வசித்து வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக் தரவரிசையில், முதல் இடத்தில் இருக்கும் அவர், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.


6. ஷரத் கமல் (டேபிள் டென்னிஸ்)



சென்னையைச் சேர்ந்த வீரராக ஷரத் கமல், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்ற பிரபல டேபிள் டென்னிஸ் விரர். 2021 ஒலிம்பிக் தொடரில், ஆண்களுக்கான தனி நபர், கலப்பு இரட்டையர்  என இரண்டு பிரிவுகளிலும் பங்கேற்க இருக்கும் இவர் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களுள் மிக முக்கியமான வீரர்.


7. சத்தியன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ்)


இந்திய டேபிள் டென்னிஸ் அரங்கில் மற்றுமொரு முக்கியமான வீரரான சென்னையை சேர்ந்த சத்தியன் குணசேகரன் 2021 ஒலிம்பிக் தொடரில், ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் பங்கேற்கிறார். டேபிள் டென்னிஸ் விளையாட்டின் உலக தரவரிசை பட்டியலில் டாப்-25 இடங்களை பிடித்த முதல் இந்திய வீரரானார்.



கோவை வீராங்கனைகள் தேர்ச்சி


இந்தியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடுதல் அணியைத் தவிர, பேக்-அப் வீராங்கனைகளாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காயத்திரி நித்தியாநந்தம் மற்றும் ஸ்ரீ நிவேதா ஆகிய இரண்டு வீராங்கனைகள் 2021 ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். வாய்ப்பு இருக்குமாயின், இவ்விரு வீராங்கனைகளும் போட்டிகளில் பங்கேற்கலாம்.