தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் முடிவு செய்யும் வரை தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று பரபரப்பான தீர்ப்பு வழங்கினர்.


டூட்டி சந்த் அதிருப்தி:


உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் பிரபல தடகள வீராங்கனை டூட்டி சந்த் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ நான் என் தோழி மோனாலிசாவை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால், உச்சநீதிமன்றத்தின் முடிவு அனைத்து திட்டத்தையும் வீணாக்கிவிட்டது. நான் மோனாலிசாவுடன் கடந்த 5 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன்.


எங்கள் இருவரில் யாரும், யாரையும் கட்டாயப்படுத்தி வாழவில்லை. எங்கள் விருப்பப்படியே வாழ்கிறோம். எங்களால் ஏன் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாது?


என்ன சிரமம்?


நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாகதான் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கான முடிவை எடுக்க எங்கள் இருவருக்கும் உரிமை உண்டு. மத்திய அரசு விரைவில் தன்பாலின திருமண சட்டத்தை அமல்படுத்தும் என்று நம்புகிறோம். சில நாடுகளில் தன்பாலின திருமணத்தை அங்கீகரித்துள்ளன. இந்தியாவில் அதை அங்கீகரிப்பதில் என்ன சிரமம்? ” இவ்வாறு அவர் கூறியுள்ளார். டூட்டி சந்த் இந்தியாவின் மிகவும் பிரபலமான தடகள வீராங்கனை ஆவார். இந்தியாவிற்காக அவர் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.


நீதிமன்ற தீர்ப்பு:


தன்பாலின ஈர்ப்பாளர்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒரே பாலினத்தைச் சேர்ந்து வாழ அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வழக்கமான திருமண முறை மற்றும் தன்பாலின திருமண முறை ஆகியவற்றை ஒரு நாணயத்தின் இரண்பு பக்கங்களாக பார்க்க வேண்டும் என்று கூறினார்.


மற்ற நீதிபதியான எஸ்.ரவீந்திரபட் தன்பாலின திருமணம் என்பது அடிப்படை உரிமை ஒன்றும் கிடையாது. அது ஒரு கலாச்சார சீர்கேடாகும். சமூகத்திற்கான தொந்தரவு மட்டுமில்லாமல் சட்டரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். திருமணத்திற்கான உரிமை என்பது ஒரு சட்டப்பூர்வமானதாகும். தன்பாலின திருமணங்களுக்கு அனுமதிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று நீதிபதி நரசிம்மா கூறினார்.


மேலும் படிக்க: IND vs BAN: பெரிய அணிகளுக்கு ஆப்கன், நெதர்லாந்து கற்றுத்தந்த பாடம்! எச்சரிக்கையுடன் களமிறங்குமா இந்தியா?


மேலும் படிக்க: LEO Release LIVE: லியோ படம் ரிலீஸ் .. இணையத்தில் ட்ரெண்டாகும் லோகேஷின் முந்தைய படங்கள்..!