LEO Special Show: புதுச்சேரியில் ‘லியோ’ திரைப்படம் 7 மணி சிறப்பு காட்சி ரத்து : காரணம் என்ன..?
LEO Release: புதுச்சேரியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ திரைப்படம் 7 மணி சிறப்பு காட்சி ரத்து.

லியோ திரைப்படம் புதுச்சேரியில் 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதித்துள்ள நிலையில் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காலை 10 மணிக்கு லியோ திரைப்படம் முதல் காட்சியாக வெளியிடப்படும் எனவும் தமிழகத்தில் காலை 9 மணிக்கு காட்சிகள் துவங்காததால் புதுச்சேரியில் முன்னதாக வெளியிட விநியோகஸ்தர்கள் அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள படம் “லியோ”. இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி என ஏகப்பட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ”ராக் ஸ்டார்” அனிருத் இசையமைத்துள்ளார்.
Just In




இதனிடையே லியோ படம் நாளை (அக்டோபர் 19) உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. அதேசமயம் லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசிடம் தயாரிப்பு நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் காலை முதல் காட்சி 9 மணிக்கு தமிழ்நாட்டில் திரையிடப்பட உள்ளது.
அதேசமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் லியோ படம் வெளியாகவுள்ளது. இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் எல்லையில் இருக்கும் ரசிகர்கள் பக்கத்து மாநிலத்துக்கு படையெடுத்து வருகின்றனர். அதேசமயம் நாளை படம் ரிலீசாகவுள்ள நிலையில் இன்னும் சில தியேட்டர்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்படவில்லை.
இதற்கு காரணம் வரும் வசூலில் 80% தயாரிப்பு தரப்பு பங்குத்தொகை கேட்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சென்னையில் பிரதான தியேட்டர்கள் சிலவற்றில் இன்னும் டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கவே இல்லை. குறிப்பாக கமலா, ஈகா, தேவி, ரோகிணி ஆகிய தியேட்டர்கள் டிக்கெட் முன்பதிவை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு பெயர்போன ரோகிணி தியேட்டரில் லியோ படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரோகிணி தியேட்டரில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ரசிகர்களுக்காக லியோ ட்ரெய்லர் திரையிடப்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால் அந்த தியேட்டரின் பிரதான ஸ்கீரினின் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டது. கிட்டதட்ட 400 இருக்கைகள் சேதமடைந்ததால் இதனை மாற்றும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. 5 ஸ்கிரீன்களை கொண்ட ரோகிணி தியேட்டரில் இந்த குறிப்பிடப்பட்ட ஸ்கீரினில் படம் திரையிடப்படுவது சந்தேகம்தான் என தியேட்டர் நிர்வாக இயக்குநர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த பங்குத்தொகை விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படாததால் ரோகிணி தியேட்டரில் லியோ படம் திரையிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.