கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பில் 224 பயனாளிகளுக்கு 22 இலட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட மக்களின் தேவைகளை கேட்டறிந்து, ஆட்சியர் மூலம் நலத்திட்டங்கள் வழங்கி வருகிறோம். கோவையில் இன்று 224 பயனாளிகளுக்கு 22 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரம் உயர இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவையில் இஸ்லாமியர்களுக்கான கல்லறை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். தனியார் நிலத்தை விலைக்கு வாங்கி அரசு உதவியுடன் கல்லறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள தேவைகளை நிறைவேற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.
இஸ்ரேலில் இருந்த தமிழர்கள் பாதுகாப்பு கருதி வந்துள்ளார்கள். அவர்கள் மீண்டும் இஸ்ரேல் சென்று படிப்பு மற்றும் வேலைகளை தொடர வாய்ப்புள்ளது. தமிழக அரசு சார்பில் விருப்பத்தின் அடிப்படையில் 132 பேரை அழைத்து வந்துள்ளோம். 120 பேருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 120 பேருக்கு விமான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. 12 பேர் சொந்த செலவில் திரும்பி உள்ளனர். அவர்களுக்கு உணவு, வாகன வசதி செய்து தந்து இல்லம் செல்லும் வரை உதவி செய்துள்ளோம். இஸ்ரேலில் இருந்து வந்தவர்களின் கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன்.
ஹஜ் பயணத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை மையமாக இருக்கும் என்பதால், அங்கிருந்து 4024 பேரை அனுப்பி வைத்தோம். கோவையில் இருந்து ஹஜ் பயணம் அனுப்ப விருப்பத்தின் அடிப்படையில், முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். சிறுபான்மையினர் நலத்துறைக்கு முதல்வர் நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளார். அந்த நிதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று நலத்திட்டங்களை வழங்கி வருகிறேன். ஒருவர் (வேலூர் இப்ராஹிம்) கோவை வந்தார் என்பதற்காக நான் கோவைக்கு வருவது என்பது திராவிட மாடல் செயல் அல்ல. சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறோம். ஒன்றிய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற்று கொடுத்தால் பெருமை. சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஒன்றிய அரசு வழங்கி வந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது. ஒன்றிய அரசு 60 சதவீதம், தமிழ்நாடு அரசு 40 சதவீதம் என திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறோம். இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கூடுதல் திட்டங்களை கேட்டு பெற்று தருவோம்” எனத் தெரிவித்தார்.