இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கடைசி நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுடைய வெற்றி வாய்ப்பும் பாதிப்படைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணியின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து வேகப்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டையும் வீழ்த்தினர். 


அதில் குறிப்பாக ஜஸ்பிரீத் பும்ரா முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டும் எடுத்து மொத்தமாக போட்டியில் 9 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் காரணமாக தற்போது வெளியாகி உள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மீண்டும் டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன்பாக பும்ரா தரவரிசையில் 19-ஆவது இடத்தில் இருந்தார். தற்போது 10 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 






அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆகிய இந்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளார். இவர் 4ஆவது இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதம் கடந்த கேப்டன் ஜோ ரூட் தரவரிசையில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆண்டர்சென் மற்றும் பிராட் ஆகிய இருவரும் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறியுள்ளனர். 


மற்ற இந்திய வீரர்களை பொறுத்தவரை டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோகித் சர்மா 6-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 7ஆவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். அவர்களுடைய தரவரிசை புள்ளிகள் மட்டும் சற்று குறைந்துள்ளன. அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். 


மேலும் படிக்க:ஆகஸ்ட் எப்போதும் இந்தியாவுக்கு பெஸ்ட்... ஏன் என்பதில் இருக்கும் சுவாரஸ்யம்!