கொரோனா பாதிப்புக்கும் மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக் தொடர் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. அத்துடன் இதற்கு முன்பாக 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்று இருந்த 6 பதக்கங்கள் என்ற எண்ணிக்கையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் தங்கம் வென்றுள்ளது. கடைசியாக இந்தியா 2008 ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் வென்றது. அதன்பின்னர் மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இந்தியா வரலாறு படைத்தது. அதனை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ரியோ ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற அவர், நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார். அதுவே அவரது கடைசி ஒலிம்பிக் போட்டியாக அமைந்தது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்தியா வென்றிருக்கும் தங்கப்பதக்கத்தை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவும் ஆகஸ்டு மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி தங்கப்பதக்கத்தை வென்றார். தன்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 23 வயதான இவர் இந்தியாவிற்கு தடகளத்தில் முதல் தங்கத்தை வென்று அசத்தினார். இந்தியா, தங்கம் வென்ற ஆகஸ்டு 7-ம் தேதி ‘தேசிய ஈட்டி எறிதல்’ நாளாக அறிவித்து தடகள சம்மேளனம் பெருமைக் கொண்டது.
வரலாற்றில் ஆகஸ்டு மாதத்தில், விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்கு சில மறக்க முடியாத நினைவுகள் பதிவாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 29-ம் தேதி, ஹாக்கி மேஜர் தயான் சந்த் பிறந்தநாள் அன்று தேசிய ஹாக்கி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி, மேஜர் தயான் சந்த்தை கெளரவிக்கும் வகையில், விளையாட்டுத் துறைக்கு வழங்கப்பட்டு வரும் நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருது, தயான் சந்த் பெயரில் வழங்கப்பட்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஹாக்கி விளையாட்டில், இந்தியாவுக்காக மூன்று ஒலிம்பிக் பதக்கங்களை வென்று தந்த அணியில் தயான் சந்த் இடம் பெற்றிருந்தார். அலகபாத்தை பூர்வீகமாக கொண்ட தயான் சந்த், இந்திய ஹாக்கி அணியின் முகமாக பின்நாளில் அறியப்பட்டார். ஏற்கனவே, மேஜர் தயான் சந்த் பெயரில், விளையாட்டு துறையில் வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களை கெளரவிக்கும் வகையில், ‘தயான் சந்த் விருது’ வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இப்போது கேல் ரத்னா விருது தயான் சந்த் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அணிக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய் சானு தன்னுடைய பிறந்தநாளை ஆகஸ்ட் 8ஆம் தேதி கொண்டாடுகிறார். மீரா பாய் சானு மட்டுமின்றி, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விளையாட்டு லெஜெண்டுகளின் பிறந்தநாட்கள் ஆகஸ்டு மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
உசைன் போல்ட், ரோஜர் ஃபெடரர், டான் பிராட்மென் ஆகியோரும் இந்தியாவைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், தீபா கர்மார்க்கர், சாய் பிரணீத், வினேஷ் போகட், பவானி தேவி, ஜவஹல் ஸ்ரீநாத் என இந்தியாவின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் ஆகஸ்டில் பர்த்டே கொண்டாடுகின்றனர்.
மேலும், இதுவரை நடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் சிறந்த பர்ஃபாமென்ஸாக அமைந்த டோக்கியோ ஒலிம்பிக் நடைபெற்று முடிந்ததும் ஆகஸ்டு மாதம்தான். இந்திய விளையாட்டிற்கும், ஆகஸ்டிற்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு! தொடர்ந்து ஃபோடியம்களில் ஒலிக்கட்டும் இந்தியாவின் தேசிய கீதம்!